உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியல் கால்பந்து விளையாட்டாக மாறியுள்ளது - நளின் பண்டார
இந்த விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முறையாக நடத்த தவறினால், இறுதியில் கர்தினாலைக் கூட இந்த தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறும் அளவிற்கு நிலைமை மோசமடையலாம்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் மற்றும் நகர்வுகள் ஒரு அரசியல் கால்பந்து விளையாட்டுப் போல நகர்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் 19-06-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் கூறிய கருத்துக்கள் உண்மையாக இருக்கவே வாய்ப்புள்ளது. சுரேஷ் சலே அதிகாரத்தில் இருந்த காலத்தில் ஷானி அபேசேகரவின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. தற்போது அவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து சலே மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போலத் தோன்றுகிறது.
தனிப்பட்ட பழிவாங்கல்களையோ அல்லது மாற்றுத் தரப்பினருக்குச் செய்யப்படும் உடல் ரீதியான சித்திரவதைகளையோ நாம் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. சலே தவறு செய்திருந்தால் முறையான சட்டபூர்வ விசாரணை மூலம் அவருக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த விசாரணைகளை தற்போதைய அரசாங்கம் முறையாக நடத்த தவறினால், இறுதியில் கர்தினாலைக் கூட இந்த தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறும் அளவிற்கு நிலைமை மோசமடையலாம். இது நாட்டில் மீண்டும் மத மற்றும் இனவாத மோதல்களை உருவாக்க நினைக்கும் குழுக்களுக்குச் சாதகமாக அமைந்துவிடும்.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் தங்களின் பதவிக்காலத்திற்குள் இந்த விசாரணையை முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தற்போதைய அரசாங்கம் தனக்குள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்தத் கொடூரத் தாக்குதலின் உண்மையான பின்னணியைக் கண்டறிந்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றார்.





