'எமது நிலம் எமக்கு வேண்டும்' போராட்டம் நாளை: வட,கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் திரளுமாறு செல்வம் எம்.பி அழைப்பு
மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுத் திட்டங்கள் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், மன்னார் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில் அச்சந்திப்பில் நியாயமான தீர்வொன்று கிடைக்காது விட்டால் நாளையதினம் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' எனும் தொனிப்பொருளில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும், ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தின் தீவுப்பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுத் திட்டங்கள் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயத்தினை நாம் தொடர்ச்சியாக கண்டித்துவருவதுடன் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் மன்னார் தீவின் எதிர்காலம் மற்றும் பொதுமக்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய கரிசனைகளைகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் தற்போது குறித்த திட்டங்களை உடன் நிறுத்துமாறு கோரி மக்கள் எழுச்சியுடன் போரடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த திட்டங்கள் தான் பதவிக்கு வந்தால் நிறுத்தப்படும் என்று அநுரகுமார திசாநாயக்க மன்னாரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் கால பிரசாரக் கூட்டத்தில் கூறியிருக்கின்றார்.
ஆகவே அவர் தேர்தல் வாக்குறுதியை மீறிச் செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது. மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்கள் அவரை இன்றையதினம் சந்திக்கின்றன. அந்தச் சந்திப்பில் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் இல்லையேல் நாம் நாளைதினம் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் தொனிப்பொருளில், நாளை காலை 9 மணி முதல் மன்னார் பஜார் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு வட,கிழக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கை சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்களை பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
குறித்த போராட்டம் ஊடாக நாங்கள் தென்னிலங்கைக்கு ஓர் செய்தியை சொல்ல வேண்டும். எமது மக்களையும், மண்ணையும் யாரும் அபகரிக்க முடியாது. நாங்கள் துப்பாக்கி ஏந்தி போராடிய போது தியாகங்களை செய்தவர்கள். எனவே அரசியல் கட்சி பேதங்களின்றி அனைவரும் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.





