சகல சமூகங்களுக்கும் வலிமையை அளிக்குமாறு பிரார்த்திக்கிறோம்: பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ்
இவ்வனர்த்தத்தின் விளைவாக உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தையும், ஆற்றமையையும் எம்மால் நினைத்துப்பார்க்க முடிகிறது.
இலங்கை உள்ளடங்கலாக தெற்கு மற்றும் தெற்காசியப் பிராந்திய நாடுகளில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் நினைவுகூருவதாகவும், பாதிக்கப்பட்ட சகல சமூகங்களுக்குமான வலிமையை வழங்குமாறு பிரார்த்திப்பதாகவும் பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸ் அவரது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
' தித்வா ' சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன. அதற்கமைய பிரித்தானிய மன்னர் சூ ஆம் சார்ள்ஸினால் வெளியிடப்பட்டுள்ள அனுதாபச்செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மிகமோசமான சூறாவளியின் காரணமாக தெற்கு மற்றும் தெற்காசியப் பிராந்தியம் முகங்கொடுத்துள்ள பேரழிவு குறித்து நானும், எனது குடும்பத்தாரும் மிகுந்த கவலையடைகிறோம்.
இவ்வனர்த்தத்தின் விளைவாக உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து முழுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தையும், ஆற்றமையையும் எம்மால் நினைத்துப்பார்க்க முடிகிறது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரியப்படுத்துகிறோம். அத்தோடு தமது வீடுகளை இழந்த மற்றும் காணாமல்போன தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்கள் வரும் வரை காத்திருக்கின்ற மக்களுடன் நாம் உடன்நிற்கிறோம்.
அதேவேளை இப்பேரனர்த்தத்திலிருந்து மீள்வதற்கான கடின முயற்சிகளுக்கு மத்தியில் மீட்பு மற்றும் அத்தியவாசிய சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு துணிச்சலுடன் செயற்படும் முன்னரங்கப்பணியாளர்களைப் பாராட்டுகிறோம்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினரை நாம் நினைவுகூருவதுடன் இந்தியா, மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்ட சகல சமூகங்களுக்குமான வலிமையை வழங்குமாறு பிரார்த்திக்கிறோம். இத்தகைய அனர்த்தங்கள் இயற்கையின் சமநிலையைப் பேணவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





