பாக்.விமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்கக் கோருங்கள்: பிரதான எதிர்க்கட்சி
இந்தியா தனது வான்பரப்பை பயன்படுத்த ஆறு மணி நேரமே அவகாசம் வழங்கியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குச் சென்று திரும்புவதற்கு இது போதாது. எனவே அரசாங்கம் இந்த கால அவகாசத்தை நீடிக்குமாறு இந்தியாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இலங்கை எதிர்கொண்ட அனர்த்தங்களை கருத்திற் கொண்டு பாகிஸ்தான், 100 மெட்ரிக் தொன் உதவிகளை விமானங்களில் அனுப்ப தயாராக உள்ளது. எனினும், இந்தியா தனது வான்பரப்பைப் பயன்படுத்த ஆறு மணி நேரமே அவகாசம் வழங்கியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குச் சென்று திரும்புவதற்கு இது போதாது. எனவே அரசாங்கம் இந்த கால அவகாசத்தை நீடிக்குமாறு இந்தியாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 02-12-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் சுமார் 14 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு, 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளை இன்னமும் அணுக முடியவில்லை. அங்கே சிக்கியுள்ள மக்களுக்கு உடனடியாக வான்வழி நிவாரண உதவிகளை வழங்க உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
வெள்ளம் வடிந்த பின் தொற்றும் நோய்கள் பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதால், சுகாதாரத் துறை உடனடியாக பலப்படுத்தப்பட வேண்டும். பயிர்ச் சேதம் மற்றும் கால்நடை இழப்புகள் காரணமாக எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் ஏற்படலாம். இதை தவிர்க்க மலிவான விலையில் உணவு வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும்.
நிவாரணப் பணிகளுக்கு தடையாக இருக்கும் சேதமடைந்த சாலைகள் மற்றும் இடிந்த பாலங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தது ஒரு வருடமாவது கடன் தவணைக் காலத்தை நீட்டிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மத்திய வங்கிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு இலங்கை எதிர்கொண்ட அனர்த்தங்களைக் கருத்திற் கொண்டு பாகிஸ்தான், 100 மெட்ரிக் தொன் உதவிகளை (உணவு, மருந்து, நடமாடும் மருத்துவமனை) இரண்டு ஊ-130 விமானங்களில் அனுப்ப தயாராக உள்ளது.
எனினும், இந்தியா தனது வான்பரப்பை பயன்படுத்த ஆறு மணி நேரமே அவகாசம் வழங்கியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குச் சென்று திரும்புவதற்கு இது போதாது. எனவே அரசாங்கம் இந்த கால அவகாசத்தை நீடிக்குமாறு இந்தியாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
எதிர்க்கட்சியினர் தேசிய மீட்புப் பணிகளுக்குத் தமது முழு ஒத்துழைப்பை வழங்குவதாகக் கூறினர். ஆயினும், ஜனாதிபதியின் வார்த்தைகள் மட்டும் போதாது என்றும், நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்புக்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கத் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினர். பாராளுமன்றத்தில் அனர்த்தம் குறித்த விவாதத்தைக் கோரிய போது அதற்கு இடமளிக்கப்படவில்லை என்றார்.





