முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
மேற்படி வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சாட்சியாளர்களாக 30 பேரின் பெயர்களும், வழக்கு பொருட்களாக 38 ஆவணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மே 9 வன்முறையின் போது மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல, கிரியிப்பன்கடவ பகுதியில் உள்ள சேதமடைந்த சொத்துகளுக்கு, தனது அதிகாரித்தை பயன்படுத்தி இழப்பீடாக 88 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 19-06-2026அன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த குற்றப்பத்திரிகையில் சஷீந்திர ராஜபக்ஷ, சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இத்தோடு மேற்படி வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சாட்சியாளர்களாக 30 பேரின் பெயர்களும், வழக்கு பொருட்களாக 38 ஆவணங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல, கிரியிப்பன்வெவ பகுதியில் அமைந்துள்ள அரச காணியொன்றில், சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடம் உள்ளிட்ட சொத்துக்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட 'அரகலய' போராட்டத்தின் போது சேதமடைந்திருந்தன.
குறித்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்குவது நிராகரிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதற்கு முரணான வகையில் இழப்பீட்டுக்கான காரியாலயத்துடன் இணைக்கப்பட்டிருந்த சில அரசாங்க அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் பிரயோகித்து, 8,850,000 ரூபா பணத்தை இழப்பீடாகப் பெற்றுக்கொண்டதன் மூலம் ஊழல் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.





