ஜனாதிபதியின் செலவீனம் மூன்றுமடங்கால் அதிகரிப்பு: பிரதி அமைச்சர் விளக்கம்
செலவில் உள்ள குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மூலதனச் செலவில் உள்ளது. இது 6454 மில்லியனில் இருந்து (2025) 8,712 மில்லியனாக உயர்ந்துள்ளது.
பாராளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜனாதிபதியின் செலவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் கூற்று, தொழில்நுட்ப ரீதியாக தவறான ஒப்பீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. அது ஒரு தவறான செய்தி அறிக்கையாகும் என தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
விசேட அறிவிப்பொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் ஜனாதிபதியின் செலவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இந்தக் கணக்கீட்டிற்கான அடிப்படை தவறானதாகும். 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஆரம்ப ஒதுக்கீட்டுடன் இரண்டு கூடுதல் கூறுகள் 2026 ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதற்கமைய தூய இலங்கை திட்டத்திற்காக 5050 மில்லியன் ரூபாவும், ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் வணிகமயமாக்கலுக்காக 1000 மில்லியன் ரூபாவும் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ள செலவுகளாகும். 2025ஆம் ஆண்டுக்கான சரியான மொத்த ஒதுக்கீடு 9000 மில்லியன் ரூபாவாகும்.
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 11.37 பில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் வணிகமயமாக்கலுக்காக செலவுகளும் உள்ளடங்குகின்றன. எனவே இதனை 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் தொகையானது ஏற்கனவே தூய இலங்கை திட்டம் மற்றும் ஆராய்ச்சிக்கான நிதிகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் இந்த ஆரம்ப ஒப்பீடு அடிப்படை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தவறானது.
வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒரே அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு காரணமாகும். 2025இல் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் 60 – 80 சதவீதத்தால் உயர்வடைந்தது. அதைன நாம் படிப்படியாகவே அதிகரிக்கின்றோம். அந்த வகையில் 2026ஆம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு 35 – 35 சதவீத சம்பள அதிகரிப்பும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
செலவில் உள்ள குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மூலதனச் செலவில் உள்ளது. இது 6454 மில்லியனில் இருந்து (2025) 8,712 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த மூலதனச் செலவு அதிகரிப்பில் தான் தூய இலங்கை மற்றும் ஆராய்ச்சிஃபுத்தாக்க திட்டங்களுக்கான நிதி சேர்க்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்கள் வேகமாகப் பரவி, நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாதிக்கிறது. செய்திகளை வெளியிடும் முன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களிடமிருந்து, குறிப்பாக நிதி அமைச்சகத்திடமிருந்து தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் சரிபார்க்குமாறு பொறுப்புள்ள ஊடக நிறுவனங்களை வலியுறுத்துகின்றோம் என்றார்.





