தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
மலையக மக்களுக்கான 10 பேர்ச் காணி பகிர்ந்தளிப்பு குறித்து பேசிய பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களை மீண்டும் நினைவுறுத்தினர்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் தாமதாகிவிட்டன என்று தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அப்பணிகளை விரைவாக முன்னெடுப்பதாகவும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்ற தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழ்பேசும் மக்களின் நலனை முன்னிறுத்தி ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 03-08-2026 அன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
சுமார் இரண்டு மணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், பா.உ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முருகேசு சந்திரகுமாரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பா.உ ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, பா.உ மொஹமட் தாஹிர் மற்றும் பா.உ மொஹமட் தாஹிரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பா.உ ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பா.உ வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது விசேடமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை மற்றும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாமை என்பன தொடர்பில் தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் அதிருப்தி வெளியிட்டனர்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் தாமதாகிவிட்டதாக ஏற்றுக்கொண்டதுடன், அவற்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்தோடு நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும் எனத் தாம் ஏற்கனவே அறிவித்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள், தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறும், அதன் பின்னர் அடுத்த பதவிக்காலம் வரையுள்ள இடைவெளியில் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரமுடியும் என்றும் என்றும் எடுத்துரைத்தனர். இருப்பினும் அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். அவ்வேளையில் குறுக்கிட்ட சாணக்கியன் மற்றும் நிஸாம் காரியப்பர், அத்தெரிவுக்குழுவில் தாம் அங்கம் வகிப்பதாகவும், காலத்தை இழுத்தடிக்கும் நோக்கிலேயே அத்தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு, அதற்கான காரணங்கள் பற்றி விளக்கமளித்தனர். எவ்வாறிருப்பினும், இவற்றை செவிமடுத்த பின்னர் பதிலுரைத்த ஜனாதிபதி, இதனை இழுத்தடிப்பின்றி விரைவாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து தான் தெரிவுக்குழுவின் தலைவருடன் பேசுவதாகவும், அதன் பின்னர் பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து காணி விவகாரத்தில், ஏற்கனவே தாம் வெளியிட்ட கொள்கை பிரகடனத்தில் உள்ளவாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள சகல காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும், அதற்கமைய இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை 'ஏன் விடுவிக்க முடியாது?' என்பதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றைத் தருமாறு தான் இராணுவத்தினரிடம் கோரியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். எது எவ்வாறிருப்பினும் தாம் காணி விடுவிப்பை நிச்சயமாக செய்தே தீருவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேவேளை மலையக மக்களுக்கான 10 பேர்ச் காணி பகிர்ந்தளிப்பு குறித்து பேசிய பிரதிநிதிகள், தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களை மீண்டும் நினைவுறுத்தினர். இருப்பினும் இக்காணி பகிர்ந்தளிப்பு தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளுடனேயே பேசவேண்டும் என்று நழுவல் போக்கிலேயே ஜனாதிபதி பதிலளித்ததாக தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான திருத்த யோசனை பற்றிய உங்களது அபிப்பிராயம் என்னவென்று சுமந்திரன் மற்றும் ரவூப் ஹக்கீமை நோக்கி ஜனாதிபதி வினவினார். அதற்குப் பதிலிறுத்த அவர்கள், இந்த யோசனையை தாம் நிராகரிப்பதாகவும், நீதித்துறை சார்ந்த ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு எதிரான நிலைப்பாட்லேயே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.
சந்திப்பின் நிறைவில் இவ்வாறு தமிழ்பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் கரிசனைக்குரிய விடயங்கள் பற்றிப் பேசுவது வரவேற்கத்தக்க விடயம் என்றாலும், சிலர் இதனை இனவாத நோக்கில் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எனவே இனிவருங்காலங்களில் அவர்கள் நாட்டுமக்களின் பொதுப்பிரச்சினைகள் குறித்தும் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய விடயமாகும் என்றும், தாம் அவ்வாறான விடயங்களையும் உள்ளடக்கியே பேசுவதாகவும் குறிப்பிட்டனர்.
இது இவ்வாறிருக்க இச்சந்திப்பு குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் அப்பணிகளை அவசரமாகச் செய்யமுடியாது எனவும், பல்வேறு சமூகங்களுக்கு இடையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளக்கூடிய சமூகப் பரிசீலனையாக அதுகுறித்துக் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இது 1948, 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பைப் போன்று குறித்தவொரு தரப்பினரால் மாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் அரசியலமைப்பாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்துக் கருத்துரைத்த ஜனாதிபதி, அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதுடன், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையும் ஒழிக்கப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனக் குறிப்பிட்டார். அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்தை விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக்கொள்வதே அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு 'மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் பொருட்டு தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களுக்கு வதிவிடத்துக்காக 10 பேர்ச் காணிக்கான சட்டபூர்வ உரிமையை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கருத்துரைத்த இராதாகிருஷ்ணன், கம்பனிகளின் எதிர்ப்பு காரணமாக தங்களது அரசாங்கங்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாதிருந்த அந்தப் பணி, தற்போதைய அரசாங்கதத்தின்கீழ் நிறைவேறும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்' என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





