குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரசாரம் - பிரதமர் ஹரிணி
அரச நிதியை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் பிரச்சாரம் செய்வது வெறுக்கத்தக்கதொரு செயற்பாடு.
2027 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் ஒரு விரிவாக்கப்பட்ட நிதி செயற்திட்டத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அரச நிதியை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் பிரசாரம் செய்வது வெறுக்கத்தக்கதொரு செயற்பாடு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 2022 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பின் பின்னர் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. இதன் பின்னர் பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டது. அதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்திட்ட நிபந்தனைகள் தான் தற்போது செயற்படுத்தப்படுகின்றன.
நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய தரப்பினர்கள் தான் சர்வதேச நாணய நிதியத்தை நாடி பொருளாதார மீட்சிக்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட நிபந்தனைகள் மிக மோசமானது என்று மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட நிபந்தனைகள் நாட்டுக்கு சிறந்தது. நாடு என்ற ரீதியில் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டுமாயின் கடுமையான தீர்மானங்களை அமல்படுத்த வேண்டிய சூழல் காணப்பட்டது. நாணய நிதியத்தின் செயற்திட்டத்தால் நிதி ஒழுக்கம் பேணப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள, அரச நிர்வாக கட்டமைப்பு வெளிப்படையான வகையில் வினைத்திறனாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் இதனை நன்கு அறிவார்கள். ஆனால் வங்குரோத்து நிலையடைந்துள்ள எதிர்க்கட்சியினர் தான் குறுகிய அரசியல் இலாபத்துக்காக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
2027 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் ஒரு விரிவாக்கப்பட்ட நிதி செயற்திட்டத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அரச நிதியை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் பிரச்சாரம் செய்வது வெறுக்கத்தக்கதொரு செயற்பாடு.
2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்டம் நிறைவடையும். அரசமுறை கடன்கள் தற்போதும் செலுத்தப்பட்டுகிறது. ஆகவே நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே பொருளாதாரம் குறித்து எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் போலியான குற்றச்சாட்டுக்கள் குறித்து அச்சமடைய தேவையில்லை என்று நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.





