ரணில் விக்கிரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கலல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் 25-08-2025 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார். நாட்டின் பொதுச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது.முன்னாள் ஜனாதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கலல்ல, சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது ஒன்றும் புதிதல்ல.
எவரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகிறது. விசாரணை நிறுவனங்களும் சுயாதீனமாக செயற்படுகின்றன. ஆகவே விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கலாம் என்றார்.





