வலி.வடக்கு காணிகளை விடுவிக்க முடியாது: பிரதி அமைச்சர் அருண
பிரதேச செயலகம் அவர்களிடம் இது குறித்து விசாரித்த போதிலும், அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
வடக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் இராணுவத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் காணிகள், அப்பகுதிகளின் பாதுகாப்புக்கும் மூலோபாய முக்கியத்துவத்திற்கும் அவசியமான காணிகளாகும். ஆகவே அவற்றை விடுவிக்க முடியாது.அத்துடன் பலாலி சர்வதேச விமான நிலையத்தைக் கொண்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இலங்கை விமானப் படையினரால் பயன்படுத்தப்படும் 774.98 ஏக்கர் காணிகளையும் விடுவிக்க முடியாது. மாற்றுக் காணிகள் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
கேப்பாப்பிலவு பகுதியில் தற்போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் அரசாங்கத்திற்கும் சிவில் மக்களுக்கும் சொந்தமான காணிகள் தொடர்பில், எல்லைக் குறியீடு மற்றும் அளவீட்டுத் திட்டங்களைப் பெறும் நடைமுறையின் போது, 55 சிவில் காணி உரிமையாளர்களில் 44 பேர் தமது அசல் காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகளை ஏற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 04-08-2026 அன்று நடைபெற்ற அமர்வின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிக்கவில்லை. பாதுகாப்பு காரணிகளின் நிமித்தமே காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குள் இலங்கை இராணுவத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் காணிகள், அப்பகுதிகளின் பாதுகாப்புக்கும் மூலோபாய முக்கியத்துவத்திற்கும் அவசியமான காணிகளாகும். அதன்படி, இராணுவத்தின் தொடர்ச்சியான பயன்பாட்டிற்காக இவை வைத்திருக்கப்படும் அத்தியாவசியக் காணித் துண்டுகளாகும்.
மேலும், இராணுவத்தால் முழுமையாக பயன்பாட்டில் உள்ள 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், 2013 ஏப்ரல் 26 ஆம் திகதியிட்ட 1807/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காணி சுவீகரிப்புச் சட்டத்தின் (அத்தியாயம் 460) 38 பிரிவின் கீழ் செய்யப்பட்ட உத்தரவின்படி, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் (வடக்கு) பிரதேச செயலகப் பிரிவிற்குள் இலங்கை கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஐந்து காணித் துண்டுகள் உள்ளன.மேலும் இக்காணிகள் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமான மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அமைந்துள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான சர்வதேச கடல் எல்லையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மனித கடத்தலைத் தடுப்பது உட்பட தேசிய பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்வதற்கும், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கடல் எல்லைக்குள் இந்திய மீன்பிடிப் படகுகளால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை அடக்குவதற்கும் இக்காணிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதன்படி, அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள ரேடார் அமைப்புகள் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் அதேவேளையில், சிறிய படகுகள், நடை ரோந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்படை அப்பகுதியின் பாதுகாப்பை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகின்றது.
மேலும்,இதுவரை வலிகாமம் (வடக்கு) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆறு காணித் துண்டுகள் சிவில் நிர்வாக நோக்கங்களுக்காக இலங்கை கடற்படையினரால் பல சந்தர்ப்பங்களில் விடுவிக்கப்பட்டுள்ளன.மேற்குறிப்பிட்ட காரணிகளைக் கருத்திற் கொண்டு, இலங்கை கடற்படையினரால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஐந்து காணித் துண்டுகளும் தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானவை என்பதோடு, தந்திரோபாய மற்றும் மூலோபாயக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானவை. எனவே, இக்காணித் துண்டுகளை விடுவிக்காமல் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
பலாலி சர்வதேச விமான நிலையத்தைக் கொண்டுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இலங்கை விமானப் படையினரால் பயன்படுத்தப்படும் மொத்த காணிப் பரப்பளவு 774.98 ஏக்கர்களாகும். இலங்கை விமானப்படையானது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து செயல்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், இக்காணித் துண்டுகளை விடுவிக்க முடியாது.
மேலும், இக்காணிகள் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்டவையா என்பதைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்கான தகவல்கள் இலங்கை விமானப்படையிடம் இல்லாததால், இது தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை வலிகாமம் வடக்கு பிரதேச செயலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் அமைந்துள்ள மத ஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளை இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்து விடுவிக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ள காணித் துண்டுகள், 2013 ஏப்ரல் 26 ஆம் திகதியிட்ட 1807ஃ23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காணி சுவீகரிப்புச் சட்டத்தின் (அத்தியாயம் 460) 38 பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் கீழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்காக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணித் துண்டுகளாகும்.
இந்தப் இடங்களுக்குச் சென்று மத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தலைமைச் செயலகம் - யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகள் மற்றும் செயல்பாட்டு இயக்ககத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு கண்ணகாம்பிகை அம்மன் கோவில் விரிவாக்கத்திற்காகக் கோரப்பட்ட காணித் துண்டு, தற்போது இலங்கை இராணுவத்தின் 1 வது படையணியின் பயன்பாட்டு காணியாகும்.இது முன்னர் கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் பயன்படுத்தப்பட்டது. கோவில் விரிவாக்கத்திற்காக கோரப்பட்ட காணித் துண்டு,பொதுமக்களின் உரிமையிலிருந்து இலங்கை இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்ட ஒரு காணித் துண்டாகும். கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களுக்காக இராணுவ நிதியிலிருந்து செலவழிக்கப்பட்ட 8,466,355.64 ரூபா தொகையை மீளப்பெற்ற பின்னர்,குறித்த காணித் துண்டை இலங்கை இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்து விடுவிக்க முடியும்.
இரணைமடு சந்தியில் இலங்கை இராணுவத்தின் 1 வது படணி நலன்புரி வர்த்தக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள மற்றும் இரணைமடு சந்தியில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வரைபடம் எண் 2549 இல் உள்ள காணித் துண்டு எண் 924 - பகுதி பி, சிறுவர் பூங்காவாகப் பயன்படுத்தப்பட்டது, மேலும் அந்தக் காணித் துண்டு 29.03.2025 ஆம் திகதியன்று கரைச்சி பிரதேச செயலக அலுவலகத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மேலும், விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான, இலங்கை இராணுவத்தின் 6வது சிங்கபாகு படைப்பிரவுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மேற்குறிப்பிட்ட காணித் துண்டு, இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, 11.03.2026 ஆம் திகதியன்று கிளிநொச்சி விவசாயத் திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பகுதியில் தற்போது இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வரும் அரசாங்கத்திற்கும் சிவில் மக்களுக்கும் சொந்தமான காணிகள் தொடர்பில், எல்லைக் குறியீடு மற்றும் அளவீட்டுத் திட்டங்களைப் பெறும் நடைமுறையின் போது, 55 சிவில் காணி உரிமையாளர்களில் 44 பேர் மாத்திரமே தமது அசல் காணிகளுக்கு பதிலாக மாற்று காணிகளை ஏற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்.
விருப்பம் தெரிவித்த 44 நபர்களுக்கு அரசாங்கம் கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் தலா 40 பேர்ச்சஸ் கொண்ட மாற்று நிலத் துண்டுகளை வழங்கி வீடுகளைக் கட்டிக் கொடுத்ததுடன், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக முன்பள்ளி,பாடசாலை,கிராம உத்தியோகத்தர் அலுவலகம் மற்றும் சமூகக் கூடம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தது. எஞ்சிய 11 பொதுமக்கள் மாற்று நிலங்களையும் வீடுகளையும் ஏற்றுக்கொள்ள விருப்பமின்மையை வெளிப்படுத்தியதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், மாற்று நிலங்களையும் வீடுகளையும் ஏற்றுக்கொள்ளாத 11 பொதுமக்களிடம், தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் நிலத் துண்டுகளுக்கு அரசாங்கத்தால் மதிப்பிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் நஷ்டஈட்டைப் பெற்றுக்கொண்டு, அந்நிலங்களை இலங்கை இராணுவத்திற்குப் கைமாற்ற ஒப்புக்கொள்வார்களா என்பதைச் கண்டறியுமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரதேச செயலகம் அவர்களிடம் இது குறித்து விசாரித்த போதிலும், அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
எனவே, கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் காணிகளையும் வீடுகளையும் ஏற்றுக்கொள்ளாத 11 பொதுமக்கள் முன்னர் உரிமை கோரிய காணிகளின் அளவிற்கான நிலத் துண்டுகளை, இலங்கை இராணுவ முகாமால் பயன்படுத்தப்பட்டுள்ள எஞ்சிய பகுதியில் ஒதுக்கித் தர முடியும் என்றும், அரசாங்க நிதி மற்றும் இலங்கை இராணுவத்தின் மனிதவளப் பங்களிப்பைக் கொண்டு அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்க முடியும் என்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.





