சவுதியினால் தண்டிக்கப்பட்ட அனோஜன் விவகாரம்: மேன்முறையீடு மற்றும் பொதுமன்னிப்பு கோரல் குறித்து ஆராய்கிறோம்
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 04-08-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரத்தில் மேன்முறையீடு செய்வது குறித்து அவரது குடும்பத்தாருடன் பேசிவருவதாகவும், சவுதி அரேபிய அரசாங்கத்துடனான இராஜதந்திர அணுகுமுறை ஊடாக அவருக்கான பொதுமன்னிப்பு அல்லது தண்டனை குறைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்து ஆராய்வதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 04-08-2026 அன்று கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது மதநிந்தனை குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் சவுதி அரேபிய சட்டத்தின்படி மேன்முறையீடு செய்வதற்கு மிகச்சொற்ப கால அவகாசமே வழங்கப்படுவதாகவும், அதற்கமைய மேன்முறையீடு செய்வதற்கு அனோஜனின் குடும்பத்தினரின் அனுமதி அவசியம் என்பதனால், இதுபற்றி அவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
மேலும் ரியாத்தில் உள்ள இலங்கை தூதகரத்தின் ஊடாக சவுதி அரசாங்கத்துடன் இராஜதந்திர அணுகுமுறை ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அனோஜனுக்கு பொதுமன்னிப்பையோ அல்லது தண்டனைக் குறைப்பு உள்ளிட்ட வேறு சலுகைகளையோ பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





