அமெரிக்காவின் தாக்குதலை ஜனாதிபதி ஏன் கண்டிக்கவில்லை - எதிர்க்கட்சித்தலைவர் சஜித்
அமெரிக்காவுடன் அரசாங்கம் சமுத்திர வலயம் தொடர்பான அறிவுறுத்தல்கள் தொடர்பிலே ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
மத்திய கிழக்கு யுத்தத்தில் அரசாங்கம் நடுநிலையாக செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார். நடுநிலையாக செயற்படுதாக இருந்தால் , அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறி மேற்கொண்ட தாக்குதலை ஜனாதிபதி ஏன் கண்டிக்கவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 20-03-2026 அன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஈரான் போர்ச்சூழலுக்கு மத்தியில் அரசாங்கம் நடுநிலையாக நடந்து கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். நடுநிலையாக செயற்படுதாக இருந்தால் , அமெரிக்கா சர்வதேச சட்டத்தை மீறி மேற்கொண்ட தாக்குதலை ஜனாதிபதி ஏன் கண்டிக்கவில்லை. அதுதொடர்பில் உத்தியோகபூர்வ ரீதியிலான அறிக்கையொன்றையேறும் ஏன் இன்னும் வெளியிடவில்லை என கேட்கிறோம். சர்வதேச சட்டம் மீறப்பட்டிருக்கும் நிலையில் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் நாங்கள் எமது கவலையை தெரிவித்துக்கொள்கிறோம்.
அமெரிக்காவுடன் அரசாங்கம் சமுத்திர வலயம் தொடர்பான அறிவுறுத்தல்கள் தொடர்பிலே ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அப்படியானால் பொருளாதார சமூத்திர வலயத்தில் ஈரான் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குவது தொடர்பில் அமெரிக்கா அறிவுறுத்தி இருந்ததா என கேட்கிறேன். அவ்வாறு அறிவுறுத்தவில்லை என்றால், அப்போது இந்த ஒப்பந்தம் மீறப்பட்டிருக்கிறது. அதனால் இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும்.
அத்துடன் பொருளாதார சமூத்திர வலயத்தில் கப்பல்களுக்கு வந்துவோக முடியும் என்றும் மோதி்க்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பொருளாதார சமுத்திர வலய சமவாயத்தின் பிரகாரம், அங்கு சமாதான, அமைதியான நடவடிக்கைகளையே மேற்கொள்ள முடியும். மோதல்களை மேற்கொள்ள முடியாது. அதனால் ஜனாதிபதியின் இந்த கூற்றை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். சர்வதேச சட்டம் தொடர்பில் அறியாமலே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்திருக்கும் நிலையில் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கிறார்கள் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ரஷ்யாவுக்கான அமெரிக்காவின் பொருளாதார தடை 30 நாட்களுக்கு இல்லாமலாக்கப்பட்டிருந்தது. இது ஜனாதிபதிக்கு தெரியாதா? அந்த காலப்பகுதியை பயன்படுத்திக்கொண்டே ரஷ்யாவுடன் கலந்துரையாடி எரிபொருள் பெற்றுக்கொள்ள கலந்துரையாடுமாறு நான் அரசாங்கத்துக்கு தெரிவித்திருந்தேன். என்றாலும் சிறிது நாட்களுக்கு பின்னர் அரசாங்கம் ரஷ்யாவுடன் கலந்துரையாடியதாக தெரிவித்திருந்தது. ஆனால் எரிபொருள் கொண்டுவருவது தொடர்பில் ரஷ்யாவுடன் அரசாங்கம் கதைக்கவில்லை என்ற செய்தியை ரஷ்யா வெளியிட்டிருந்தது.
மேலும் இந்த யுத்தம் எமது உள்ளக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு இல்லை என்றே அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால் தரம் குறைந்த நிலக்கரி பயன்படுத்தி மின்உற்பத்தி செய்யப்படுவதால், கடந்த 12ஆம் திகதியில் இருந்து நுரைச்சோலை மின் உற்பத்தியில் நாளாந்தம் உற்பத்தியாகும் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 176 மெகாவோட் குறைந்துள்ளது. இவ்வாறு மின் உற்பத்தி குறைவடையும்போது மின் துண்டிப்புக்கு செல்ல வேண்டி ஏற்படுகிறது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. அதனால் இதனை தவிர்த்ததற்காக அரசாங்கம் பொது மக்களுக்கு இறக்குமதி செய்யும் டீசலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும்போது நுகர்வோருக்கு தேவையான எரிபொருள் இல்லாமல் போகிறது.
அன்று எரிபொருளுக்கு கியூஆர் பயன்படுத்தும்போது அதனை விமர்சித்தார்கள். கியூஆர் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் ஒன்று எதற்கு என கேட்டார்கள்.
எனவே தற்பாதைய நெருக்கடி நிலையில் இருந்து மீள அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி புதிய ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டும். அதேபோன்று எரிபொருளுக்கான வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமையை ஒழிக்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் நாட்டில் மூன்றில் ஒரு வீதம் வறுமை நிலையில் இருக்கிறார்கள். உலக யுத்தம் காரணமாக இது மேலும் அதிகரிக்கும். அதனால் அரசாங்கம் இந்த விடயங்களை கருத்திற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.





