உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு - 367 பேர் மாயம்
பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் இருக்கும்.
தித்வா புயல் ஏற்படுத்தி பேரிடர்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 01-12-2025 மாலை வரை 366உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு, மேலும் 367 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை 25 மாவட்டங்களிலும் 3,16 ,366 குடும்பங்களைச் சேர்ந்த 11,51,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 61, 612 குடும்பங்களைச் சேர்ந்த 2,18, 526 பேர் 1,564 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மலையகத்திலேயே அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. கண்டியில் 88 பேர் உயிரிழந்துள்ளதோடு 150 பேர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியாவில் 75 பேர் உயிரிழந்துள்ளதோடு 62 பேர் காணாமல் போயுள்ளனர். பதுளையில் 71 நபர்கள் காணாமல் போயுள்ளனர். இவை தவிர குருணாகலில் 37 பேர் உயிரிந்துள்ளதோடு 35 பேர் காணாமல் போயுள்ளனர். மாத்தளையில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு 6 பேர் காணாமல் போயுள்ளனர். கேகாலையில் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு 48 பேர் காணாமல் போயுள்ளனர்.
களனி கங்கை, மல்வத்து ஓயா, களு கங்கை, மகாவலி கங்கை என்பவற்றுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள எச்சரிக்கை நேற்று மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படுவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இவற்றை அண்மித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் மறு அறிவித்தல் வரை தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என்றும், அங்கிருந்த வெளியேறாதவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும். ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தித்வா புயலானது நேற்று திங்கட்கிழமை மாலை காங்கேசன்துறையிலிருந்து 340 கிலோ மீற்றர் வடக்கு திசையில் நிலைகொண்டிருந்தது. மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் இருக்கும்.
பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன. அநுராதபுரத்தில் இராஜாங்கனை, அங்கமுவ, கலா வெ வ நீர்த்தேக்கங்களில் 18 வான்கதவுகளும், குருணாகலில் தெதுருஓயா நீர்த்தேக்கத்தில் 8 வான் கதவுகளும், கண்டி - பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 3 வான் கதவுகளும், மொனராகலை - வெஹெரகல நீர்த்தேக்கத்தில் 6 வான் கதவுகளும், மாத்தளை - போவதென்ன நீர்த்தேக்கத்தில் 6 வான் கதவுகளும், கண்டி - ரன்தெம்பே நீர்த்தேக்கத்தில் 2 வான் கதவுகளும், பதுளை - உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் 7 வான் கதவுகளும், களுத்துறை - குகுலேகல நீர்த்தேக்கத்தில் வான் கதவொன்றும், அம்பாந்தோட்டை - லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தில் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.





