கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகருக்கு இடமாற்றம்
சட்டத்தரணி தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமை பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம் துஷார பொலிஸ் மருத்துவ சேவை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்துக்கருகில் சட்டத்தரணியை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மேற்படி சம்பவம் தொடர் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், சட்டத்தரணி தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டுள்ளது. அக்காணொளி காட்சியில் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் பொலிஸ்மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிப்பதுடன், “பிரியந்த எனது ஜூனியர் குழுவை சேர்ந்தவர். பிரியாந்தவிடம் சொல்லுங்கள் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தினுள்…. பிரியந்தவிடம் என்னை தொடர்பு கொள்ளுமாறு தெரிவியுங்கள், இல்லையேல் அவரது தொலைபேசி எண்ணை தருமாறு” குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவை காரணம் காட்டி பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய பொலிஸ்மா அதிபர் பணிப்புரை வழங்கியதாக வதந்திகள் பரவி வருகின்றன. எனினும் மேற்படி சட்டத்தரணி மற்றும் பொலிஸ்மா அதிபருக்கிடையில் எவ்வித தொடர்பும் இல்லை. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவுடன் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்கிஸ்ஸை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகருக்கு அறிவித்திருந்தார். பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு அவர் தெரிவிக்கவில்லை.
விசாரணை தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கு முன்னதாகவே பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். சம்பவத்தின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த சட்டத்தரணிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கல்கிஸ்ஸை நீதவான் கல்கிஸ்ஸை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்ட விதம் குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





