சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல் பிணை மனுவும் நிராகரிப்பு
மே 9, வன்முறையின் போது சஷீந்திர ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று சேதமடைந்தது.
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்தோடு தனக்கு பிணை வழங்குமாறு கோரி சஷீந்திர ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணியுடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டிருந்தார்.
மே 9, வன்முறையின் போது சஷீந்திர ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான கிரிஇப்பன்வெவ, செவனகலவில் உள்ள காணி ஒன்றில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று சேதமடைந்தது. இக்கட்டிடத்துக்கு இழப்பீடு வழங்க இழப்பீட்டு அலுவலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்ட போதும், அவர் இழப்பீடு வழங்குமாறு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய 8,850,000 ரூபா (88 இலட்சம்) இழப்பீடு பெற்றுக் கொண்டமை மற்றும் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்களை மோசடி செய்த குற்றத்தின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கு தொடர்பான விசாரணைகள் கடந்த 19 ஆம் திகதி முன்னெடுக்கப்பட இருந்த நிலையில், விடுமுறையின் காரணமாக கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் 22 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அதற்கமைய வழக்கு விசாரணைக்காக மன்றில் முன்னிலையாகியிருந்த சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தமக்கு பிணை வழங்குமாறு கோரி சஷீந்திர ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் கொழும்பு தலைமை நீதவானால் நிராகரிக்கப்பட்டது.





