அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் பிரதிநிதிகள் சந்திப்பு
அதன் நீட்சியாக சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு 29-08-2025 கொழும்பிலுள்ள கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் உள்ளடங்கலாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் காண்பித்துவரும் தாமதம் குறித்து அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், நாட்டின் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள் மற்றும் அவை தொடர்பான தமது நிலைப்பாடு குறித்தும் விளக்களமித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் பணிப்பாளர் குழுமப் பிரதிநிதிகள் இவ்வார முற்பகுதியில் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளையும், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன் நீட்சியாக சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு 29-08-2025 கொழும்பிலுள்ள கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குக்கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாணசபைத்தேர்தல்களை நடத்துதல், பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் உரியவாறு நிறைவேற்றப்படவில்லை என தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளால் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு அண்மையில் யாழ்.செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பில் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் இதுவரையில் அடையாளங்காணப்பட்ட மனிதப்புதைகுழிகள் பற்றிய தமது நிலைப்பாடு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இவற்றை செவிமடுத்த அமெரிக்கப் பிரதிநிதிகள், இதற்கு முன்னதாக அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்புக்களின்போது தம்மிடம் கூறப்படாத பல விடயங்களை இச்சந்திப்பின் ஊடாக அறிந்துகொண்டதாகக் கூறியதாக சுமந்திரன் தெரிவித்தார்.





