அரசாங்கத்துக்கு உள்ளேயே சதி திட்டங்கள் முன்னெடுப்பு: சமன் ரத்னப்பிரிய
அரச தலைவர் ஒருவர் சாதாரணமாக பாராளுமன்றத்துக்கு வந்து உரையாற்றுவதில்லை. ஏதாவது விசேட சந்தர்ப்பங்களிலே அவ்வாறு உரையாற்றுவார்.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் மேற்கொள்வதாக தெரிவிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அரசாங்கத்துக்குள்ளேயே சதி திட்டங்கள் இடம்பெறுகின்றன. அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமருக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்து பாரதூரமானதாகுமென ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவி்த்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைதொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்துக்கு எதிராக அரசுக்குள்ளும் வெளியிலும் சதித்திட்டங்கள் இடம்பெறுவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.சதித்திட்டங்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய பலம் ஜனாதிபதி்க்கு இருக்க வேண்டும். அதேநேரம் மக்கள் ஆணையில் தெரிவான ஜனாதிபதி என்றவகையில் அந்த சதித்திட்டங்களை வெளிப்படுத்துவது நாட்டுக்கு முக்கியமாகும். எதிர்க்கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக சதித்திட்டம் மேற்கொள்வதாக தெரிவிப்பது அடிப்படையற்றதாகும். எங்களை பொறுத்தவரை அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் போதாது. அதனால், எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசாங்கத்துக்கு எதிரான சதித்திட்டம் இல்லை என்பது தெளிவாகிறது.
ஆனால் அரசாங்கத்துக்குள் சதித்திட்டங்கள் இடம்பெறுவதை காணலாம். பிரதமர் ஹரிணி அமரசூரிய, சிசி விண்வெளி தொடர்பாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பிழையென, அமைச்சர் வசந்த சமரிசங்க தெரிவித்திருக்கும் கருத்து பாரதூரமானதாகும். ஏனெனில் அவர் நாட்டின் பிரதமர். அதேநேரம் அவர் பாராளுமன்றத்துக்கு பிழையான தகவல் வழங்கியிருப்பதானது, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு காரணமாகிறது. அதனால் பிரதமர் அந்த கருத்தை சரி செய்ய வேண்டும். அல்லது, வாபஸ்பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. அதேநேரம் சிசியை சரி கண்டு தெரிவித்த கருத்தால், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்துக்குள் இருக்கும் குழப்பமே இதற்கு காரணமாகும்.
அத்துடன் அரசாங்கத்துக்கு எதிரான சதித்திட்டம் அரசாங்கத்துக்குள்ளேயே இருக்கிறது. நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம், உள்ளூராட்சி மன்ற அதிகாரம் என அனைத்தும் கிடைத்துள்ள நிலையில், அரசாங்கத்துக்கும் ஒருவருடம் கூட இல்லாத நிலையில், ஜனாதிபதி அவசரமாக பாராளுமன்றத்துக்கு வந்து இந்தளவு ஆவேசமாக உரையாற்ற முற்பட்டுள்ளதான் மூலம் அவருக்கு ஏதாவது ஒரு அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அரச தலைவர் ஒருவர் சாதாரணமாக பாராளுமன்றத்துக்கு வந்து உரையாற்றுவதில்லை. ஏதாவது விசேட சந்தர்ப்பங்களிலே அவ்வாறு உரையாற்றுவார். அல்லது மக்களுக்கு உரையாற்றுவார். ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து உரையாற்றும் அளவுக்கு விசேடமாக எதுவும் இருக்கவில்லை. அரசாங்கத்துக்கு இருந்துவந்த மக்கள் ஆணை தற்போது நீத்துப்போயுள்ளது. அதனால் அவர்களுக்கு ஒருவகையான அச்சம் ஏற்பட்டிருப்பதாகவே தெரிகிறது.
அதேநேரம் இலங்கைையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த இந்த அரசாங்கம் 18 வருடங்களாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என சீன கம்யூனிஸ் கட்சி தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார்.சீனாவுடன் இணைந்துகொண்டு, அரசாங்கம் எமது நாட்டை கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கிறது என்ற விடயம், எமது அண்மை நாடான இந்தியாவுக்கு அது பாரிய அச்சுறுத்தலாகும். எமது நாட்டுடன் மிகவும் நெருக்கமான உறவை வைத்திருக்கும் இந்தியா இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.ரில்வின் சில்வாவின் அறிவிப்பால் இந்தியா குழப்பமடைந்திருக்கிறது. அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் அரசியலை கையாளும் நபர் ரில்வின் சில்வா என்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும். அதனால் இது நாட்டுக்கு நல்லதில்லை என்றார்.





