ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாலுமிகள் விடுவிப்பு
வெளிவிவகார அமைச்சிடமிருந்து இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தமக்குக் கிடைத்த உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, மூன்று மாலுமிகளில் இருவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
வெளிநாட்டு கடற்பரப்பில் வைத்து வர்த்தக கப்பலில் இருந்து ஈரானிய தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மாலுமிகள் விடுவிக்கப்படுவதற்கு ஈரானிய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஈரானிய அரச அதிகாரிகளுக்கு இடையே பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்கள் குறித்து வணிகக் கப்பற்துறை செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அசங்க தேசப்பிரிய, இலங்கை மாலுமிகள் பயணித்த கப்பல் தடுத்து வைக்கப்பட்ட செய்தி கிடைத்தவுடன், அரசாங்கம் உடனடியாகச் செயற்பட்டது.
இலங்கை மாலுமிகளைக் கொண்ட ஒரு கப்பல் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது. அந்த குறிப்பிட்ட கப்பலில் மூன்று இலங்கை மாலுமிகள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியே இக்கப்பல் ஈரானிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு எமக்குக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்படும் மாலுமிகளைக் கையாள்வதற்கான வழமையான நடைமுறைகளை வணிகக் கப்பற்துறை செயலகம் உடனடியாக ஆரம்பித்தது.
வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு, மாலுமிகளின் விடுதலையை சாத்தியமாக்குவதற்குத் தேவையான அனைத்து இராஜதந்திர பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாக வெளிவிவகார அமைச்சு, ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தது. இத்தொடர் முயற்சிகளின் பலனாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மாலுமிகளின் விடுதலை தற்பொழுது சாத்தியமாகியுள்ளது.
வெளிவிவகார அமைச்சிடமிருந்து இருந்து கடந்த வெள்ளிக்கிழமை தமக்குக் கிடைத்த உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, மூன்று மாலுமிகளில் இருவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
மாலுமிகளின் விடுதலை அவர்களின் குடும்பங்களுக்கும் கடல்சார் சமூகத்திற்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ள போதிலும், அவர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கடுமையான இரகசியத்தன்மை பேணப்பட்டு வருகிறது. எனினும், தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்களும் ஆண்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.





