முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 28 ஆம் திகதி விசாரணை
அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து நஷ்டஈடு பெற்றுக் கொண்டமைக்கு குற்றம் சுமத்தி மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின் போது, செவணகல, கிரிஇப்பேன்வெவ பகுதியில் மஹாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அரச அதிகாரிகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து நஷ்டஈடு பெற்றுக் கொண்டமைக்கு குற்றம் சுமத்தி மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 8,850,000 ரூபா பணத்தை சட்டவிரோதமான முறையில் நஷ்டஈடாகத் பெற்று மோசடி புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி, மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.





