ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு
நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு இணங்க, இந்தப் பதவி உயர்வு 2020 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் முன் திகதியிட்டு (முந்தைய திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்) வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான, ஷானி அபேசேகர பிரதி பொலிஸ் மா அதிபராக, உத்தியோகபூர்வமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு இணங்க, இந்தப் பதவி உயர்வு 2020 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் முன் திகதியிட்டு (முந்தைய திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்) வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷானி அபேசேகர தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டுவந்த மேற்படி தீர்ப்பாயம், அவருக்குப் பதவி உயர்வு வழங்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குப் பணித்திருந்தது. குறிப்பிட்ட திகதியிலிருந்து முன் திகதியிட்டு இந்தப் பதவி உயர்வை வழங்குமாறு அந்தத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு அமைவாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ்மா அதிபர் பதவி தரத்திற்கு தரம் உயர்த்துவதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ பொலிஸ் அறிவித்தலை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர 1986 பெப்ரவரி 10 ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தார். தனது உத்தியோகபூர்வ வாழ்க்கையில், பொலிஸ் பரிசோதகர், தலைமைப் பொலிஸ் பரிசோதகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பல பதவிகளில் அவர் பணியாற்றியுள்ளார்.





