தொடரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடூரம்
கலைஞர் சங்கீத்சனின் தன்னிச்சையான தடுப்புக்காவல்இ இச்சட்டத்தின் கோரப் பற்கள் இன்னும் எவ்வளவு கூர்மையாக இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.
இலங்கையின் சமகால அரசியல் மற்றும் மனித உரிமைகள் வரலாற்றில், மிகக் கொடூரமான மற்றும் அடக்குமுறை சார்ந்த ஒரு சட்டமாக 'பயங்கரவாத தடைச் சட்டம்' உருவெடுத்துள்ளது.
1979ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்தினால்இ நாட்டில் நிலவிய அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் ஆயுதப் போராட்ட முளைகளைத் ஒடுக்கும் நோக்கில் இச்சட்டம் தற்காலிகமாக கொண்டுவரப்பட்டது.
ஆறு மாத காலத்தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம்இ 1982ஆம் ஆண்டில் நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டுஇ இன்றுவரை இலங்கையின் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அண்மையில், 24 வயதுடைய தமிழ் சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை, இக்கொடிய சட்டம் எவ்வாறு கலை, இலக்கியம் மற்றும் அடிப்படை வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படைத் தன்மையே சர்வதேச மனித உரிமைத் தரங்களுக்கும்இ இயற்கை நீதியின் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் நபரொருவர் கைது செய்யப்பட்டால்இ அவர் 24 அல்லது 48 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், சட்டத்தரணிகளை நாடுவதற்கான உரிமையும் அவருக்கு உண்டு.
ஆனால், இந்த தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர், நீதிமன்ற அனுமதியின்றி நீண்ட காலம் தன்னிச்சையான தடுப்புக் காவலில் வைக்கப்பட முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இச்சட்டத்தின் கீழ் பொலிஸ் அதிகாரியொருவர் முன்னிலையில் பெறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எனப்படும் சுயவாக்குமூலம், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான முதன்மைச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சாதாரண சட்டத்தில் இது செல்லுபடியற்றது. இந்த ஒரேயொரு விதியும், அதன் பின்னாலுள்ள எல்லையற்ற அதிகாரமுமே சித்திரவதைகளுக்கும், கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களுக்கும் வழிவகுக்கின்றன.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்த சட்டத்தின் கீழ் எவ்வித விசாரணைகளுமின்றி பல வருடங்களாக சிறைகளில் வாடியுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கையின் எந்தவொரு அரசாங்கமும் இக்கொடிய சட்டத்தை நீக்குவதற்கு உண்மையான அரசியல் விருப்பத்தைக் காட்டவில்லை.
மாறாக, மாற்றுக்கருத்துடையோரை, அரசியல் எதிரிகளை, ஊடகவியலாளர்களை மற்றும் சிறுபான்மைச் சமூகங்களை ஒடுக்குவதற்கான ஒரு அரசியல் கருவியாகவே இதனைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
இச்சட்டம் சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்திய சூழலில்இ கடந்த காலங்களில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக அல்லது அதற்குப்பதிலாக சர்வதேசத் தரத்திற்குப் பொருத்தமான புதிய சட்டத்தைக் கொண்டுவருவதாக உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திற்கும் தொடர்ச்சியான வாக்குறுதிகளை அளித்தன.
குறிப்பாகஇ ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது அல்லது அதற்குப் பாரிய திருத்தங்களை மேற்கொள்வது முக்கிய நிபந்தனையாக விதிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகஇ இச்சட்டம் நீக்கப்படும் வரை அதனைப் பயன்படுத்துவதில்லை என்ற இடைக்கால தடைக்கான உறுதிப்பாட்டை வழங்குவதாகவும் தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள அநுர அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இருப்பினும், சர்வதேச சமூகத்திற்கு வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் 'கண் துடைப்பு' நாடகங்கள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அளித்த இடைக்காலத் தடை உறுதிப்பாட்டை மீறியும்இ இச்சட்டம் தொடர்ந்தும் மிகத் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மிக சமீபத்திய மற்றும் அதிர்ச்சியளிக்கும் உதாரணமே கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனின் கைதாகும்.
வெறும் 24 வயதுடைய இந்த இளைஞர்இ தனது சொல்லிசை பாடல்கள் மூலம் சமூகக் கருத்துக்களையும், மக்களின் அவலங்களையும் வெளிப்படுத்தி வந்தவொரு கலைஞர் ஆவார். இச்சட்டத்தினால் ஏதோவொரு வகையில் தடைசெய்யப்பட்ட பாடலை அவர் பாடினார் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிட்டார் என்ற அற்பமான குற்றச்சாட்டின் பேரில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டுஇ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடூர விதிகளின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு கலைஞன் தனது கலை வடிவத்தின் மூலம் கருத்துக்களைப் பகிர்வது என்பதுஇ சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 19ஆம் உறுப்புரையின்படி அங்கீகரிக்கப்பட்ட 'கருத்துச் சுதந்திரத்தின்' அடிப்படைப் பகுதியாகும்.
பயங்கரவாதத்திற்கும்இ பாடலைப்பாடுவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையில், இத்தகைய கைதுகள் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும்இ இளைஞர்களுக்கும் 'அரசாங்கத்தை அல்லது கட்டமைப்பை விமர்சித்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்படும்' என்ற அச்சமூட்டும் செய்தியே கடத்தப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரால் சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்ஸ் வைட்லியைச் சந்தித்த சாணக்கியன்இ சங்கீத்சனின் கைது விவகாரம் மற்றும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான இலங்கையின் கடப்பாடுகள் குறித்துக் காரசாரமாக விவாதித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு ஒரு முகத்தையும், உள்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக மற்றொரு முகத்தையும் காட்டுவதை இச்சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை என்பது வெறும் பொருளாதார வர்த்தக உடன்படிக்கை மட்டுமல்ல.
அது அடிப்படை மனித உரிமைகள்இ சிவில் உரிமைகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை ஒரு நாடு எவ்வாறு மதிக்கிறது என்பதன் மீதே தங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி சலுகைகளைப் பெற்றுக்கொண்டுஇ பின்னர் அதே கொடூரச்சட்டத்தைப் பயன்படுத்தி இளைஞர்களையும் கலைஞர்களையும் சிறையிலிடுவது, சர்வதேச சமூகத்தை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு ஏமாற்றும் செயலாகும்.
இது இலங்கையின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் நேரடியாகப் பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும் அரசாங்கம் அதனைக் கவனத்தில் கொள்வதாக இல்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது பயங்கரவாதத்தை தடுப்பதற்கான ஒரு சட்டம் அல்ல மாறாக அது அரசாங்கங்களின் தன்னிச்சையான அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்குமான அரச பயங்கரவாதக் கருவியாகும்.
கலைஞர் சங்கீத்சனின் தன்னிச்சையான தடுப்புக்காவல்இ இச்சட்டத்தின் கோரப் பற்கள் இன்னும் எவ்வளவு கூர்மையாக இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது. அந்த புரிதல் முதலில் அனைவருக்கும் அவசியமானதாகும்.
சர்வதேச சமூகம், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகள், இலங்கை அரசாங்கத்தின் வெறும் வெற்று வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல், இக்கொடூரமான சட்டத்தை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் முற்றாக நீக்குவதற்கு வலுவான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
சட்டம் என்பது குடிமக்களைப் பாதுகாப்பதற்கே அன்றிஇ அவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கல்ல. எனவே சங்கீத்சன் போன்ற கலைஞர்களின் விடுதலைக்காகவும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தின் நீக்கத்திற்காகவும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான குரல்கள் ஒன்றிணைந்து ஒலிக்க வேண்டியது அவரசமான அவசியமாகும்.





