பயங்கரவாத தடை சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும். - ஜனாதிபதி அநுரகுமார
அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மற்றும் அனுசரணையிலேயே பாதாளக் குழுக்கள் வளர்ந்தன. இதனை வீழ்த்துவதை குறிப்பிட்ட மாதங்களில் இல்லாமல் செய்துவிட முடியாது.
இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.ஊழல் மற்றும் கடந்த கால படுகொலைகள் குறித்து விசாணைகளை மேற்கொள்ளும் போது விசாரணையாளர்களை எதிர்க்கட்சியினர் எதிரிகளாக பார்க்கிறார்கள். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கை எடுப்பது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும். ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களுக்கு எதிராக விசேட சட்டம் வெகுவிரைவில் உருவாக்கப்படும். கீழ் நிலை நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்காமல் உயர், மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வெற்றிடங்களை நிரப்பினால் கீழ் நிலை நீதிமன்றங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படும். நீதியரசர்களுக்கான நியமனங்கள் குறித்து பிரதம நீதியரசர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீதியரசர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவது நீதித்துறையை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 25-06-2026 அன்று நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எமது நாட்டில் நச்சு போதைப் பொருட்களும் மற்றும் ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்களும் நீண்ட காலமாக பரவி சமூகம் பெருமளவில் சீரழிந்துள்ளது. இதனால் எமக்கென பொறுப்புகள் உள்ளன. இதன்படி நச்சுப் போதைப் பொருட்கள் மற்றும் ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பங்களிப்பை வழங்குவது எமது கடமை. இந்த நச்சு போதைப் பொருட்களும் குற்றக் கும்பல்கள் உருவாகுவதும் வளர்வதும் அவை தானாக நடந்தது என்று நாம் நம்ப முடியாது. இது தொடர்பில் தெளிவான தொடர்பு வலையமைப்பு உள்ளது. இதனால் இவற்றை ஒழிக்க இதனுடன் தொடர்புடைய சகல துறைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.
திட்டமிட்ட குற்றக் கும்பல்கள், போதைப் பொருள் வியாபாரிகள்இ அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகாரங்களில் இருந்த ஊழல் மோசடிகள், அரசுக்குள் புகுந்திருந்த அரசியல் நோக்கங்களுடன் செயற்பட்ட நிழல் அரசு ம ற்றும் அரசியல் ஆகிய அனைத்தையும் இல்லாமல் செய்தே இதனை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
இதற்காக போதைப்பொருள்களை பிடிப்பதற்கான சுற்றி வளைப்புகள் ? பாதாளக் குழுக்களை பிடிப்பதற்காக நடத்தப்படும் சுற்றிவளைப்புகள் மட்டும் போதுமானது அல்ல.இதில் பெரும் பங்களிக்கும் குழுக்கள் உள்ளன. ஊழல்கள், திட்டமிட்ட குற்றக் கும்பல்கள்இ போதைப் பொருள் வியாபாரிகள், அரச செயற்பாட்டில் செயற்பட்ட குற்றச் செயல்கள், அரசியல் ஆகிய அனைத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும். இவற்றை இல்லாமல் செய்ய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்காக அரச நிறுவனங்கள் உள்ளன. அதற்கு தலைமைத்துவம் வழங்கி அவற்றை தோற்கடிக்கும் அரச அதிகாரிகளின் பொறிமுறை எமக்கு அவசியம். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் இப்போது எதிர்க்கட்சியின் எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர்.
குறிப்பாக குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர பெரும் பங்களிப்பை வழங்குகின்றார். அத்துடன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோர் இந்த நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளின் எதிரிகளாக தென்படுகின்றனர்.அரசுக்குள் இருந்துகொண்டு அரச அனுசரணையில் குற்றம் செய்திருந்தால் அவர்களை வெளிப்படுத்துவது தேசத்துரோக செயற்பாடா?
எமது அரசை ஒழுக்கமுள்ள அரசாக மாற்ற வேண்டும். ஜனாதிபதி முதல் கீழ் மட்ட அதிகாரிகள் வரையில் ஒழுக்கமுள்ளவர்களாக மாற்ற வேண்டும். எமது இராணுவம், புலனாய்வு பிரிவினர் மக்களுக்காக முன்னெடுத்த பணிகள், நாட்டின் பாதுகாப்புக்காக செயற்பட்டிருந்தால் அவர்களை பாதுகாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இராணுவத்தில் புலனாய்வு பிரிவை சேர்ந்த குழுவொன்று அரசியல் நோக்கத்தில் ஏதாவது ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காகவோ, ஏதேனும் அரசியல் முகாமுக்காகவோ செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்.
லசந்த விக்கிரமதுங்க எவ்வாறு கொலை செய்யப்பட்டார்?அரசாங்கத்திற்கு எதிரான ஊடகவியலாளர் கொலை செய்யப்படுகின்றார். இது புலனாய்வு பிரிவை பயன்படுத்தி செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்தால் இதனை மூடி மறைக்க முடியுமா? கீத்நொயார் கடத்திச் செல்லப்பட்டார். அவர்கள் இராணுவ பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. உபாலி தென்னக்கோன், போதல ஜயந்த ஆகியோருக்கும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது சிவில் மோதல் அல்ல. தமது குடும்பம் மற்றும் தமது அரசியல் முகாமின் அதிகாரங்களுக்காக செய்யப்பட்ட குற்றச் செயல்களாகும். தாஜுதின் கொலை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகியனவும் அவ்வாறுதான் நடந்துள்ளன.குடும்ப தொடர்பும் காணப்படுகிறது.
அத்துடன் சிரச ஊடக நிறுவனம் மீது தீ வைக்கப்பட்டது. சியத்தவுக்கு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றின் பின்னால் சிறிய அரச பொறிமுறையின் இயக்குனர்கள் இருந்தனர். வெள்ளை வான் அச்சுறுத்தல் இருந்தது. இலக்கத் தகடு இல்லாத வெள்ளை வானில் கடத்தப்பட்டனர். இது சிவில் மோதல் அல்ல. நாட்டை பாதுகாக்க வேண்டிய குழுவினர் தமது நோக்கங்களுக்காக மிலேட்சத்தனமாக கொலைகளை செய்கின்றனர். ஆனால் நிச்சயமாக இந்த கொலைகள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக சட்டங்களை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமே இது.
இந்த நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் குற்றவாளிகளுக்கும், அதன்மூலம் நன்மையடைந்தவர்களுக்கும், அதன்மூலம் அதிகாரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றவர்களுமே ஆகும். ஆனால் எவருக்கும் இந்த நடவடிக்கைகளை எதிர்க்க முடியாது. இது தொடர்பில் நடவடிக்கைகளையும்,விசாரணைகளையும் நடத்துபவர்களுக்கு எதிராக இருந்து அந்த முயற்சிகளை தடுக்க முயற்சிக்கினறர். ஆனால் நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
குற்றவாளிகள் கொலை செய்யப்படுவதை தடுப்பதற்காக எனவும், மரணத்தில் இருந்து காப்பாற்றுவதாகவும் கூறி பணம் பெறுபவர்கள் இருக்கின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து மாற்றுவதாக கூறியும் பணம் பெற்றுள்ளனர். காலத்தினால் இது மூடி மறைக்கப்பட்டுவிடும் என்று யாராவது நினைக்கலாம். ஆனால் அவ்வாறு மூடி மறைக்க முடியாது. இன்று (நேற்று) கைதானவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது பின்னர் தெரியவரும். எவ்வாறாயினும் அரசியல் அதிகாரங்கள் மூலம் வழங்கப்படும் பாதுகாப்புகளை நாங்கள் முழுமையாக இல்லாமல் செய்வோம்.
இதேவேளை ஊழல் தொடர்பில் நாங்கள் நீண்ட காலமாக கதைக்கின்றோம். டி.டி முறைமையில் பொருட்களுக்காக முற்பணங்களை செலுத்தி பணத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அதற்கான பொருட்கள் வருவதில்லை. 2023 முதல் இது வரையில் டி.டி ஊடாக பில்லியன் டொலர் வரையில் முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பொருட்கள் வரவில்லை. இவ்வாறு 300 பில்லியன் ரூபாவை சாதாரண ஒருவரால் நாட்டில் இருந்து வெளியில் அனுப்ப முடியாது. இதில் குற்றங்களில் பெற்ற பணம், போதைப் பொருள் பணம், ஊழல் மோசடி பணம் என்பன உள்ளன. இதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இதில் சில வங்கிகள்இ வங்கி அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளனர். இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
இங்கே எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கலை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. பாராளுமன்றத்தினால் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்ய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தனியாக 7 மேல் நீதிமன்றங்களை அமைத்துள்ளோம். இதன்மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதே எமது நோக்கம். இதனை எவரும் பழிவாங்கலாக கூற முடியாது.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரிகளை துரத்திச் சென்று விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் இருக்கின்றனர். திருடுவதற்கு இடமளிக்குமாறும், தண்டனை வழங்க வேண்டாம் என்றும் கூறுவதாகவே உள்ளது. ஆனால் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணங்கள் மக்களிடையே உள்ளன. இந்த எதிர்ப்பார்ப்பில் அரசாங்கங்களை மக்கள் தெரிவு செய்கின்றனர். ஆனால் வரும் அரசாங்கங்கள் சிறிது காலங்களிலேயே திருடுகின்றன. எவ்வாறாயினும் எமது அரசாங்கம் அப்படி செய்வதில்லை. ஊழல், மோசடிக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு உயிரூட்டும் அரசாங்கமாக இது இருக்கும். அதனை தற்போது செய்து வருகின்றது.
அந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பெருமளவான அதிகாரிகள் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே செயற்படுகின்றனர். பெருமளவானவர்களுக்கு எதிராக பிடியாணைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன . பலர் நீதிமன்றங்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் தப்பிச் சென்றுள்ளனர். 7, 8 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும். அமெரிக்காவுக்கு சென்று இருக்கின்றனர். ஆனால் நாங்கள் சிவப்பு பிடியாணை உத்தரவை பிறப்பித்து நாட்டுக்கு அழைத்து வந்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிந்தளவுக்கு நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை சில சாட்சியாளர்கள் நாட்டில் இருந்து சாட்சியமளிக்க பயப்படுகின்றனர். இதன்படி வெளிநாடுகளில் இருந்து அவ்வாறான சாட்சியாளர்களிடம் சாட்சிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. அதேபோன்று போதைப் பொருளை ஒழிப்பதற்காக நாங்கள் கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் பெருமளவில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதாள குழுவினர் முதல் கெளரவத்திற்கு உரியவர்கள் வரையில் இவ்வாறு கைதாகியுள்ளனர். இவர்கள் தொடர்பில் தகுதி தராதரம் பார்க்காமல் சட்டத்தை செயற்படுத்துவோம். சிவப்பு பிடியாணை மூலம் பலர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் இருந்து செயற்படுபவர்களும் இருக்கின்றனர். இதன்படி அங்கிருந்து செயற்படாத வகையில் வெலிசறையில் சிறைச்சாலையொன்றை நிர்மாணித்து அவ்வாறானவர்களை அந்த சிறையில் அடைத்து வெளித் தொடர்புகளை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் போதைப் பொருளையும், அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்களையும் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் பெருமளவான ஆயுதங்களையும் நாங்கள் மீட்டுள்ளோம். கிழக்கில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதத்தையும் மீட்டுள்ளோம்.
அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மற்றும் அனுசரணையிலேயே பாதாளக் குழுக்கள் வளர்ந்தன. இதனை வீழ்த்துவதை குறிப்பிட்ட மாதங்களில் இல்லாமல் செய்துவிட முடியாது. வடக்கு,கிழக்கிலும், தோட்டப்புறங்களிலும் இது பரவியுள்ளது. இதனை ஒழிக்க வேண்டும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை இந்த நடவடிக்கைகளை ஜனநாயகத்தை சீர்குலைத்து செய்ய மாட்டோம். ஒரு காலத்தில் தொலைபேசியில் கதைப்பதற்கு பயமாக இருந்தது, வீதியில் நடந்து செல்ல பயம் இருந்தது. வெள்ளை வான் தொடர்பான அச்சம் இருந்தது. இவ்வாறு ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால் இப்போது எவரும் ஆட்சியாளர்களுக்கு அஞ்சத் தேவையில்லை. உரிமைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை ஆகியவற்றை உயர்வாக ஏற்றுக்கொள்ளும் அரசாங்கமே இது. ஜனாதிபதியாக எனக்கு மக்கள் வாக்களித்திருந்தால் என்னிடம் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பும் உரிமையும் மக்களுக்கு உள்ளது. இதுவே ஜனநாயகம். நாங்கள் அதற்கு மதிப்பளிப்போம்.
1979ஆம் ஆண்டில் பயங்கரவாத தடைச் சட்டம் விசேட ஒழுங்குவிதிகள் தற்காலிக சட்டமாக ஒரு வருடத்திற்கென்றே கொண்டு வரப்பட்டது. இதனை இல்லாமல் செய்ய வேண்டும் என 46 வருடங்களாக போராட்டங்கள் இருந்துள்ளன. ஜனநாயகம்இ உரிமைகள் தொடர்பில் கதைப்போரிடையே கடுமையான சட்டம் தொடர்பில் பிரச்சினை இருந்தது. இதனை நீக்குமாறு நீண்ட காலமாக போராட்டம் நடத்தினர். எவ்வாறாயினும் இந்த வருடத்தில் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாமல் செய்யப்படும். வரும் சில மாதங்களில் அது நடக்கும். நீதி அமைச்சர் அது தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளார். அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். இதன்படி கூடிய விரைவில் அதனை இல்லாமல் செய்வோம்.
இதேவேளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் அச்சுறுத்தல்கள் உள்ளன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பலமான சட்டத்தை தயாரிக்க வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் தொடர்பில் பல்வேறு வகையில் வரைவிலக்கணங்களை கூறி வழக்குகளை தொடரலாம். ஆனால் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான வரைவிலக்கணம் செய்யப்படும். குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் எவராவது தமக்கு இணங்காவிட்டால் அவர்களை பிடிக்கக்கூடிய ஏற்பாடுகளை கண்டுபிடிக்க முடியும். ஆனால் நாங்கள் மக்களின் உரிமைகள்இ ஜனநாயகத்தை முழுமையாக பாதுகாத்து திருத்தங்களை மேற்கொண்டு அதனை முன்வைப்போம். அத்துடன் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சரியான வரைவிலக்கணத்துடன் புதிய சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக நாங்கள் செயற்படுத்துவதில்லை. அதனை முழுமையாக திருத்தி புதிய திருத்தச் சட்டமூலம் முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கடந்த செங்கோலை தூக்குவதற்கு எதிர்க்கட்சியினர் சபைக்கு நடுவே வந்தனர். இதற்கு முன்னர் இப்படி நடக்கும் போது அரசாங்கமும் சபைக்கு நடுவில் இறங்கும். ஆனால் எங்களில் ஒருவரும் ஆசனத்தில் இருந்து இறங்கிச் செல்லவில்லை. அவர்கள் அதனை தூக்கிச் சென்றிருந்தால் அது வீர செயற்பாடு அல்ல. செய்யக்கூடாத வேலையே. இந்த நாட்டுக்கு ஒழுக்கத்தை கொண்டு வர வேண்டும். இங்கு கதைப்பதற்கும், போராடுவதற்கும் தேவையான இடமுள்ளது. நாங்கள் எவ்விடத்திலாவது ஒழுக்கத்திற்கு வர வேண்டும். இதற்கு சிறந்த இடம் இந்த பாராளுமன்றமே என்றார்.





