மட்டு. மேல் நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய தேரர் பிணையில் விடுதலை
தேரர் கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என்று தெரிவித்தார்.
‘தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்’ என கூறியமை தொடர்பாக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரட்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்ததை அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு 2026 ஜனவரி 20ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
குறித்த தேரர் கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என்று தெரிவித்தார்.
இந்த தேரர் தெரிவித்த இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாடு பயணத்தடை விதித்து மட்டு மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடிவிறாந்து வழங்கியதையடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணி களுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து நீதிபதி தேரை ஒரு இலட்சம் ரூபா கொண்ட இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





