உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த அமெரிக்கா - இலங்கை கூட்டு வரைவு
இலங்கையின் எதிர்காலத் திறன் மேம்படுவதுடன், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளும் விரிவடையும்' என்றார்.
இலங்கையின் உயர்கல்வித் துறையில் முதலாவது தேசிய செயற்கை நுண்ணறிவு கொள்கைக் கட்டமைப்பை வடிவமைப்பதற்காக, இலங்கையுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இணங்க, அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு நிபுணத்துவம், தராதரங்கள் மற்றும் புத்தாக்கங்களின் அடிப்படையில் இக்கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை அதிகாரிகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளது.
இக்கொள்கை வரைவின் முன்னோடி அறிமுக விழா நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். அமெரிக்கத் தூதரகத்தின் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் மற்றும் முக்கிய அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு விசேட பேராசிரியர் உஸ்ரி பட்டாச்சார்யாவின் தொழில்நுட்ப வழிகாட்டலில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான, வெளிப்படைத்தன்மையுடைய மற்றும் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப இலங்கை பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க இந்த வழிகாட்டுதல் உதவும். இத்திட்டத்தின் கீழ், இலங்கையிலுள்ள 18 அரச பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழிற்துறை வல்லுநர்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன.
அமெரிக்காவின் இக்கூட்டு முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த தூதரக விவகாரப் பொறுப்பாளர் ஜேன் ஹொவெல், 'செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய முன்னணியாளராக விளங்கும் அமெரிக்கா, தனது நம்பகமான தொழில்நுட்பங்களையும் தராதரங்களையும் இலங்கையுடன் பகிர்வதில் பெருமையடைகிறது. இதன் மூலம் இலங்கையின் எதிர்காலத் திறன் மேம்படுவதுடன், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளும் விரிவடையும்' என்றார்.
இலங்கை உயர்கல்வி முறையை நவீனமயமாக்கவும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாணவர்களைத் தயார்படுத்தவும் இம்முயற்சி பெரும் பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவை முறைப்படி புகுத்துவதற்கு வழிகாட்டும் இத்தேசிய கொள்கைக் கட்டமைப்பு, வரும் ஜூன் மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் நடைமுறைப்படுத்துவதற்காக விநியோகிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் தொழில்நுட்ப உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





