திஸ்ஸ விகாரையின் வரலாற்று சிறப்புமிக்க புனித நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நடவடிக்கை
தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்ட 'யாழ்ப்பாண வரலாற்று சான்றுகள்', 'மறைக்கப்பட்ட வடக்கு' மற்றும் 'பண்டைய யாழ்ப்பாணம்' போன்ற வரலாற்று நூல்களிலும் இவ்விகாரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை திஸ்ஸ விகாரையின் வரலாற்று சிறப்புமிக்க புனித நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் வகையிலும், அதன் ஊடாக புதிய பாதையொன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வை வழங்கி அதனைத் தடுக்க வேண்டும் என தேசிய பாரம்பரிய பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய பாரம்பரிய பாதுகாப்பு மையத்தின் தலைவர் மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரின் ஆலோசனையின் பேரில் கொழும்பில் 11-08-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, வடக்கு மற்றும் கிழக்கில் அழிந்துவரும் பௌத்த பாரம்பரியங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் செயலாளரும், தேசிய பாரம்பரிய பாதுகாப்பு மையத்தின் பிரதிநிதியுமான கலகம குசலதம்ம தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைப் பிரச்சினை தொடர்பிலும் அதன் வரலாற்றுத் தொன்மை குறித்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நிலவும் சட்டப்பூர்வ நிலைமைகளின்படி, திஸ்ஸ விகாரைக்குள் எவ்விதமான தனிநபர் காணிகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பௌத்த விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், திஸ்ஸ விகாரையின் மையப்பகுதி ஊடாகப் புதிய பாதையொன்றை அமைப்பதற்குப் பலவந்தமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரன் சுகிந்தன் மற்றும் செயலாளர் சிவகுமாரன் சிவானந்தன் ஆகியோருக்கு எதிராகப் பலாலி பொலிஸாரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட்டிருந்த தடையுத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதேச சபையினால் மீண்டும் இந்த நிலத்தின் ஊடாகப் பாதையை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமரபுர ஸ்ரீ கல்யாணவங்ச விகாரைப் பிரிவின் மகா லேககார் வணக்கத்திற்குரிய புஸ்ஸாலெ;லாவே சோமவிசுத்தி நாயக்க தேரரினால் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வக் கடிதத்தில், திஸ்ஸ விகாரையின் வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் அறிஞர்களால் எழுதப்பட்ட 'யாழ்ப்பாண வரலாற்று சான்றுகள்', 'மறைக்கப்பட்ட வடக்கு' மற்றும் 'பண்டைய யாழ்ப்பாணம்' போன்ற வரலாற்று நூல்களிலும் இவ்விகாரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
அத்துடன், 1971 ஆம் ஆண்டின் நகர அளவீட்டு வரைபடம், 1959 ஆம் ஆண்டின் வரைபடம் மற்றும் 1954 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரச அதிபரால் மகா பாராபத்திய அதிகாரியிடம் வழங்கப்பட்ட பதில் அறிக்கை ஆகியவற்றின் மூலம், இங்கு பௌத்த விகாரை ஒன்று அமைந்திருந்தது என்பதும், சுமார் 14 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலம் விகாரைக்குச் சொந்தமானது என்பதும், அங்கு எவ்விதமான தனிநபர் காணிகளும் இருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்திலும், திஸ்ஸ ரஜமகா விகாரைக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்து, சிக்கல்களைத் தீர்த்து, மீண்டும் விகாரையிடம் ஒப்படைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போதைய அரசாங்கத்தில் பௌத்த மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தலைமையிலான குழுவினராலும் நடத்தப்பட்ட விசாரணைகளில், விகாரை நிலத்தில் பொதுமக்கள் எவருக்கும் சொந்தமான காணி இல்லை என்பது மீண்டுமொருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திஸ்ஸ விகாரையில் தற்போது எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்றும், பாதை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் விகாரையின் விகாராதிபதி கின்தோட்டை நந்தாராம தேரர் அண்மையில் ஊடகங்களுக்குக் கூறியிருந்தார். இருப்பினும், விகாராதிபதியின் கூற்றை விடவும், அமரபுர கல்யாணவங்ச நிக்காயவின் தலைமை செயலகத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பே முதன்மையானது.
நில உரிமையைக் கோரி காணியைக் கைப்பற்ற முடியாத சூழலில், பிரதேச சபையின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய செயல்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கத்தைப் பாதிப்பதுடன், பௌத்தர்களுக்கும் ஏனைய தரப்பினருக்கும் இடையே தேவையில்லாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். எனவே, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இதில் உடனடியாகத் தலையிட்டு, விகாரையின் வரலாற்று நில உரிமையைப் பாதுகாக்கவும், இன முரண்பாடுகள் ஏற்படுவததைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





