இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி அளிப்பதற்கு முடிவு
குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், குறித்த சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை ஊடாக நாட்;டுக்கு வருகை தருவதற்கு வாய்ப்பு வழங்குதல்.
யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப்; பயன்படுத்தாமல், நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் தமது இலங்கையர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளவர்கள், சுயமாக எமது நாட்டுக்கு மீண்டும் திரும்பும்போது, அவர்களுக்கு குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 11-08-2026 அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முடிவுகளை அறிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது அறிவிப்பில் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் போது நாட்டில் நிலவிய உறுதிப்பாடற்ற சூழ்நிலை காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைமுகத்தின் ஊடாக மற்றும் முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று, பின்னர் இந்திய அரசாங்கத்தால் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் மூலம் சுயமாக எமது நாட்டுக்குத் மீண்டும் திரும்புவதற்கு எதிர்பார்க்கின்றார்கள்.
அவர்கள் எமது நாட்டுக்கு மீண்டும் வருகை தருவதற்குத் தேவையான குடிவரவு ஒப்புதல் அனுமதி வசதிகள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைக்கமைய, கீழ்க்காணும் படிமுறைகளை மேற்கொண்டு, மேற்குறிப்பிட்டவாறு இந்தியாவிற்குச் சென்றுள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் எமது நாட்டுக்குத் திரும்பி வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2006-08-01 இற்கு முன்னர், அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் இடம்பெயர்ந்த அந்நாட்டின் இலங்கை வெளிநாட்டுத் தூதரகத்தின் மூலம் தமது இலங்கையர் எனும் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் தொடர்பாக அரச புலனாய்வு சேவையிடமிருந்து ஒப்புதல் அனுமதி அறிக்கையைப் பெற்றுக் கொள்ளல்.
அவர்கள் கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தின் விசேட ஏற்பாடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அல்லது விதிக்கப்பட்டுள்ள குற்றங்களை மேற்கொள்ளாத ஆள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல்.
குறித்த ஆட்களுக்கான தற்காலிக வெளிநாட்டுக் கடவுச் சீட்டை வழங்கி 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்திற்கமைய, எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை ஊடாக நாட்டுக்கு வருகை தருவதற்கான வாய்ப்பை வழங்குதல்.
2006-08-01 தொடக்கம் எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்த 2009-05-19 ஆம் திகதி வரை, அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை மற்றும் முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு முறையற்ற வகையில் புலம்பெயர்ந்தவர்ளை, மேற்குறிப்பிட்டவாறு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அரச புலனாய்வு சேவையிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஒப்புதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், குறித்த சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறை ஊடாக நாட்;டுக்கு வருகை தருவதற்கு வாய்ப்பு வழங்குதல்.
கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தின் விசேட ஏற்பாடுகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அல்லது விதிக்கப்பட்டுள்ள குற்றங்களுக்கு தவறாளர்களாக அடையாளங் காணப்பட்ட ஆட்களாக இருப்பின், அவர்களை இறங்குதுறைகளில் தடுத்து வைத்து தேவையான தொடர் சட்ட நடவடிக்கைக்கு ஏற்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுதல் என்றார்.





