ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது
மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று விளையாடிவிட்டுத் திரும்பும் நிலையே காணப்படுகிறது.
தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் 29-01-2026அன்று நான்காவது நாளாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள தமக்கு, ஆசிரியர் சேவையில் முறையான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில், பல போராட்டக்காரர்களின் உடல்நிலை நலிவடைந்து வரும் நிலையிலும், அரசாங்கம் இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமது ஆசிரியர் பணிக்கான தகுதிகள் இருந்தும், தங்களை 'அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்' என்ற வரையறைக்குள் வைத்திருப்பது அநீதியானது எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சில அரசியல் பிரதிநிதிகள் "தேர்வு மூலமே நியமனம் வழங்கப்படும்" எனப் பிடிவாதமாக இருப்பதால், இந்தப் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கடும் உடல் உபாதைகளுக்கு மத்தியிலும், தமது நியமனம் உறுதிப்படுத்தப்படும் வரை களத்தை விட்டு நகரப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதுடன், ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் மேலும் ஒரு நபரின் உடல் நிலை மோசமடைய அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இருவர் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மேலும் இருவர் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் போராட்டக் களத்திற்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், போராட்டக்காரர்களின் உடல்நிலை குறித்து தனது கவலையை வெளியிட்டார்.
"ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களாகப் பணியாற்றும் இவர்களை, அரசாங்கம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்குத் தள்ளியுள்ளது. இங்குள்ள இளைஞர்கள் இலகுவாகப் போராட்டத்தைக் கைவிடுபவர்கள் அல்ல. அவர்கள் தமது எதிர்காலத்திற்காகவே போராடுகிறார்கள். ஒருவருக்கு கூட உயிர் ஆபத்து ஏற்பட இடமளிக்காது, ஜனாதிபதி உடனடியாகச் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.
இந்த ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணமாகக் கிராமப்புறப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளன. மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று விளையாடிவிட்டுத் திரும்பும் நிலையே காணப்படுகிறது. எனவே, அமைச்சர்களின் பிடிவாதப் போக்கை எதிர்பார்க்காது, ஜனாதிபதி நேரடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வை வழங்க வேண்டும். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவே இந்தப் போராட்டம் நடப்பதால், இதில் ஏற்படும் ஏதேனும் அசம்பாவிதங்களுக்கு ஜனாதிபதியே முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.





