இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சி தனியார் முதலீடுகளில் தங்கியுள்ளது - ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார்.
தற்போது இலங்கை அதன் கவனத்தை உற்பத்தித்திறன், ஏற்றுமதி மற்றும் தனியார் முதலீடு என்பவற்றின் ஊடாக ஊக்குவிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்த்தி வருகிறது. இந்த அடுத்தகட்ட வளர்ச்சி பெருமளவுக்கு தனியார் முதலீடுகளிலேயே தங்கியுள்ளது. இதுவே இலங்கையின் எதிர்காலத்துக்கான திறவுகோலாகும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தார்.
அதன்படி கொழும்பு துறைமுகத்துக்குக் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அவர், இலங்கையின் வர்த்தகத்துக்கான முக்கிய நுழைவாயில்களில் ஒன்றான கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்டதாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் இலங்கையின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கு துறைமுகத்தின் செயற்திறன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று 'கட்டுப்பாட்டுக் கோபுரம் மற்றும் துறைமுக அணுகல் மேம்பால சாலை உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவளிக்கிறது. இது துறைமுகத்துக்கும் சர்வதேச விநியோக சங்கிலிகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை செயற்திறன் மற்றும் போட்டித்தன்மை மிக்கதாக மாற்றுவதற்கான ஆதரவை நாம் தொடர்ந்து வழங்குவோம்' என்றும் மஸாட்டோ கன்டா உறுதியளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து தனியார் துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்ட மஸாட்டோ கன்டா, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் நிலவும் தடைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் 'தற்போது இலங்கை அதன் கவனத்தை உற்பத்தித்திறன், ஏற்றுமதி மற்றும் தனியார் முதலீடு என்பவற்றின் ஊடாக ஊக்குவிக்கப்படும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்த்தி வருகிறது. இந்த அடுத்தகட்ட வளர்ச்சி பெருமளவுக்கு தனியார் முதலீடுகளிலேயே தங்கியுள்ளது. இதுவே இலங்கையின் எதிர்காலத்துக்கான திறவுகோலாகும்' என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





