‘இலங்கையை கட்டியெழுப்புவோம்': 78ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு
நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், காலை 6 மணியளவில் காலி முகத்திடலில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
'இலங்கையை கட்டியெழுப்புவோம்' எனும் கருப்பொருளின் கீழ், நாட்டின் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 04-02-2026அன்று கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் விமரிசையாக இடம்பெற்றன.
நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், காலை 6 மணியளவில் காலி முகத்திடலில் அமைந்துள்ள தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணி முதல் விகாரை, கோயில், தேவாலயம் மற்றும் பள்ளிவாசல்களில் சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன.
அதிதிகள் வருகையைத் தொடர்ந்து, காலை 8 மணியளவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுதந்திரச் சதுக்கத்திற்கு வருகை தந்தார். ஜனாதிபதியால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. தாய்நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைத்து பிரஜைகளுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.
ஜனாதிபதி தனது உரையில், 'வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாகச் செல்லுங்கள் ; வெகுதூரம் செல்ல வேண்டுமானால் ஒன்றாகச் செல்லுங்கள்.' எனக் குறிப்பிட்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலியுறுத்தினார். மேலும் இனவாதம் மற்றும் தீவிரவாதம் என்ற இரு சொற்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் இவை நமது நாட்டின் பலத்தை நமக்கே எதிராகத் திருப்பி நம்மை அழித்துவிடக் கூடியவை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மொழி, மதம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை வேறுபாடுகளை ஒருவருக்கொருவர் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய மாணவர் படையணி உள்ளடங்களாக 4,602 படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு ஜனாதிபதிக்கு முன்னால் இடம்பெற்றது. இதில் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்று ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தினர்.
இம்முறை அணிவகுப்பில் ஒரு முக்கிய அம்சமாக, கடந்த காலங்களைப் போலன்றி பாதுகாப்புப் படை வாகனப் பேரணி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்பட்டது. அதற்கமைய அங்கவீனமுற்ற 22 முன்னாள் படை வீரர்களை ஏந்திய இரு வாகனங்கள் உட்பட்ட 7 வாகனங்கள் மாத்திரமே அணிவகுப்பில் பங்கேற்றன. அணிவகுப்பின் நிறைவில் கடற்படையினரால் காலி முகத்திடலில் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
அணிவகுப்பின் போது உள்நாட்டுப் போரின் போது அங்கவீனமுற்ற 22 பாதுகாப்புப் படை வீரர்கள் கடந்து சென்ற தருணம் அங்கிருந்தோரை உணர்ச்சிவசப்பட வைத்தது. இதன்போது, ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். நீண்ட நேரம் கரகோஷமெழுப்பி அந்த வீரர்களை உற்சாகப்படுத்தியமை இந்த சுதந்திர தினத்தின் மிக நெகிழ்ச்சியான மற்றும் கௌரவமான தருணமாக பதிவானது.
வழமையான கலை நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டு, இம்முறை அரங்கேற்றப்பட்ட கலாசார நடனங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்துவதோடு மாத்திரமன்றி, ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதில் பொதுச் சேவைகளின் அத்தியாவசியத்தை இந்த நடனங்கள் உணர்த்தின.
வைத்தியர்கள், சட்டத்தரணிகள், தாதியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பொதுச் சேவை துறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்தந்த துறைகளுக்குரிய ஆடைகளை அணிந்து கலைஞர்கள் நடனமாடினர். இது நாட்டின் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவமாகப் பார்க்கப்பட்டது.
இம்முறை நிகழ்வுகளுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், செலவுகளை 60 - 70 மில்லியன் ரூபாவுக்குள் மட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாக பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன தெரிவித்தார். மேலும், இம்முறை வெளிநாட்டு விசேட அதிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சுமார் 2000 விசேட அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் அதிகாலை முதலே பெருமளவிலான பொதுமக்கள் திரண்டு நின்றதை அவதானிக்க முடிந்தது. வழக்கமாக விசேட அழைப்பாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், இம்முறை பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்தனர். குறிப்பாக, முப்படையினரின் அணிவகுப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளின் போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்வு இடத்திற்கு வருகை தந்தபோதும், உரையை நிறைவு செய்தபோதும் கூடியிருந்த மக்கள் பலத்த கரகோஷங்களை எழுப்பி தமது வரவேற்பை வழங்கினர். பல குடும்பங்கள் சிறுவர்களுடன் வருகை தந்து தேசியக் கொடிகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமை இந்நிகழ்வுக்கு ஒரு புதுப் பொலிவைத் தந்தது.





