கோட்டாபயவின் விசாரணைப் பட்டியலே முன்னெடுப்பு: முஜிபுர் எம்.பி.
நாங்கள் யாரையும் பாதுகாக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கொலைகாரர்களும் சால்வையாளர்களும் பெவலத்தையிலேயே இருக்கின்றனர்.
உயிர்த்த தாயிறு தாக்குதல் தொடர்பில் புதிதாக விசாரணை நடத்தி சூத்திரதாரியை சட்டத்துக்கு முன் நிறுத்துவதாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது, கோத்தாபய ராஜபகஷ் தயாரித்த சாட்சியாளர்கள் பட்டியலையே முன்னெடுத்துச்செல்கிறது. அதனால் நாங்கள் யாரையும் பாதுகாக்க முற்படவில்லை. ஆனால் அரசாங்கம் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மறைப்பதற்கு முயற்சித்து வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் 02-09-2026அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இனம் கண்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதனால் அந்த பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தாமல் அரசாங்கம் மறைக்க முற்படுவதாக நான் பாராளுமன்றத்தில் தெரிவித்தபோது, அவர்களின் சேறுபூசும் சமூகவலைத்தலங்களில், சூத்திர தாரியை பாதுகாப்பதற்கு நான் முயற்சிப்பதாக தெரிவித்து வருகின்றன.
நாங்கள் யாரையும் பாதுகாக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கொலைகாரர்களும் சால்வையாளர்களும் பெவலத்தையிலேயே இருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியலில் இருந்த இப்ராஹின் நாநாவின் புதல்வர்கள் இரண்டு பேருமே இந்த தாக்குதலின் பிரதான கொலை காரர்கள்.அதனால் கொலைகாரர்கள் மக்கள் விடுதலை முன்னணியுடனே இருந்தார்கள். எங்களுடன் கொலைகாரர்கள் இருக்கவும் இல்லை. அவர்கள் எங்களுடன் சம்பந்தப்படவும் இல்லை.
ஆனால் நாட்டுக்கு இந்த அநியாயத்தை செய்தவர்கள் யார்? இந்த அநியாயத்துக்கு இந்த குழுவை அரசியலுக்காக பயன்படுத்தியவர்கள் என்பதாகும். அவர்கள் இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள்.அரசாங்கம் அவர்களை கைவிட்டு, தற்போது அரங்கேற்றிவரும் நாடகம் தொடர்பிலே நாங்கள் கேள்வி எழுப்பியிருந்தோம். இந்த தாக்குதலை நடத்த உதவி செய்த ஒரு மறைமுக சக்தி இருக்கிறது. அதனை அநுரகுமார திஸாநாயக்கவும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியானால் ஏன் அந்த மறைமுக சக்தியை கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள் என நாங்ள் கேள்வி கேட்கும்போது பெலவத்தையில் இருக்கும் சிலருக்கு கோபம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
இந்த தாக்குதலில் நானும் பாதிக்கப்பட்டேன். எமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவித்தார்கள். அவை அனைத்துக்கும் முகம்கொடுத்தே இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதனால் இந்த தாக்குதலின் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை தேட வேண்டிய தேவை, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைவிட எங்களுக்கு இருக்கிறது. அவர்கள் தற்போது அதிகாரத்தை பெற்றுக்கொண்டுள்ளதால், அவர்களுக்கு பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க தேவை இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த தாக்குதலுக்கு பின்னார் இருந்து நாட்டில் தமிழ், முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் வைராக்கித்தை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தை இல்லாமல் செய்த, அந்த குழு யார் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் இந்த தாக்குதல் தாெடர்பான சாட்சியாளர்கள் கோத்தாபய ராஜபகஷ்வின் காலத்தில் பெயரிடப்பட்டிருந்தனர். அதில் பிரதான சாட்சியாளர் கோத்தாபய ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு ஆலாேசகராக இருந்தவர். இந்த தாக்குதலில் பிரதான சூத்திரதாரி இல்லை என்றே அவர் தெரிவித்து வந்தார். அது தொடர்பில் புத்தகம் ஒன்றையும் எழுதியிருந்தார். இரண்டாவது சாட்சியாளரை அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் இருக்கும்போது கடுமையாக விமர்சித்தார். அதனால் கோத்தாபய ராஜபக்ஷ் தயாரித்த சாட்சியாளர் பட்டியலையே இந்த அரசாங்கமும் கொண்டு செல்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிதாக விசாரணை நடத்தி சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் புதிதாக எதனையும் செய்யவில்லை. கோத்தாபய நிறுத்திய இடத்தில் இருந்தே இவர்கள் கொண்டு செல்கிறார்கள். அதனாலே நாங்கள் அது தவறு என தெரிவிக்கிறோம். நாங்கள் யாரையும் பாதுகாக்க முற்படவில்லை. ஆனால் அரசாங்கம் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க அல்லது மறைப்பதற்கு முயற்சித்து வருகிறது.





