சட்டத்துக்கு அப்பால்பட்டுச் செயற்படுகிறது அரசாங்கம் - கம்மன்பில
விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் ஆயுதம்,போதைப்பொருட்கள் உட்பட சந்தேகத்துக்கிடமான பொருட்கள் காணப்பட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்பதாக துறைமுக பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு குறிப்பிட்டிருந்தார்.
கடந்த கால வழக்குகளை தீவிரமாக விசாரிக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளையும் முறையாக விசாரிக்க வேண்டும்.தேசிய மக்கள் சக்தியினரும், ஜனாதிபதியும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுகிறார்கள்.இவ்வாறான நிலையில் எவ்வாறு சட்டவாட்சி கோட்பாடு மீது நம்பிக்கை ஏற்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் எவரும் செயற்பட முடியாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறிப்பிட்டார்.ஜனாதிபதியின் இந்த கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்கிறோம்.
சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நாட்டு மக்களோ அல்லது எதிர்க்கட்சியினரோ செயற்படவில்லை. தேசிய மக்கள் சக்தியினரும், ஜனாதிபதியும் தான் அவ்வாறு செயற்படுகிறார்கள்.இதற்கு பல விடயங்களை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்.
முறையான பரிசோதனைகள் ஏதுமில்லாமல் சுங்கத்தில் இருந்து விடுவிக்கப்படட 323 கொள்கலன்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அப்போதைய துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் ஆயுதம்,போதைப்பொருட்கள் உட்பட சந்தேகத்துக்கிடமான பொருட்கள் காணப்பட்டால் அதன் பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்பதாக துறைமுக பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு குறிப்பிட்டிருந்தார்.
கொள்வலன்கள் விடுவிப்பு விவகாரம் பற்றி இதுவரையில் நிதியமைச்சரான ஜனாதிபதியோ, அமைச்சரான பிமல் ரத்நாயக்கவோ,பிரதி அமைச்சரான ருவன் கொடித்துவக்குவோ விசாரிக்கப்படவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவர்களுக்கு அழைப்பு விடுக்கவுமில்லை.
சட்டத்தின் முன் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் போது எவ்வாறு சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்று குறிப்பிட முடியும். எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுவிப்பதை போன்று ஆளும் தரப்புக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுக்க வேண்டும். அப்போது தான் சட்டவாட்சி கொள்கையின் மீது நம்பிக்கை ஏற்படும்.
ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவின் மரணம் குறித்து சந்தேகம் ஏற்படுகிறது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அச்சுறுத்தல் விடுத்ததாக உயிரிழந்த கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி ஊடாக அறிவித்துள்ளார். சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பது தண்டனைச் சட்டக்கோவைக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும்.சட்டத்தின் முன் அனைவரும் சமமாயின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்றார்.





