ஜப்பானின் 2.5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி அரசாங்கத்திடம் கையளிப்பு
பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான மேலதிக உதவிகளை வழங்குவதற்கென 2.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கென ஜப்பான் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 2.5 மில்லியன் டொலர்கள் நிதியுதவி நேற்றைய தினம் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அதற்கமைய பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கென ஜப்பான் அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைவாக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் ஒருங்கிணைப்பின்கீழ் அந்நாட்டு அனர்த்த நிவாரண மருத்துவ உதவிக்குழு இம்மாதத் தொடக்கத்தில் நாட்டை வந்தடைந்ததுடன், இரு தினங்களுக்கு முன்னர் தமது பணிகளை நிறைவுசெய்து நாட்டிலிருந்து புறப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான மேலதிக உதவிகளை வழங்குவதற்கென 2.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்நிதியுதவி இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ இஸோமாட்டாவினால் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று புதன்கிழமை (17) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இந்தக் கடினமான வேளையில் ஜப்பான் அரசாங்கம் வழங்கிவரும் தொடர் உதவிகளுக்குத் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.





