பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்து
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா நாட்சம்பள அடிப்படையில் பெப்ரவரி 10ஆம் திகதி சம்பளம் வழங்கப்படும் என செயலாளர் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்கிடையில் 30-01-2026 அன்று கையெழுத்திடப்பட்டது.
பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் சார்பில் அதன் செயலாளர் பிரபாத் சந்ரகீர்த்தி மற்றும் 22 கம்பனிகளின் சார்பில் அவற்றின் செயலாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதற்கமைய அகலவத்தை, அக்கரபத்தனை, பலாங்கொட, பொகவந்தலாவ, எல்பிட்டிய, ஹப்புகஸ்தென்ன, ஹட்டன், ஹொரண, கஹவத்தை, கேகாலை, களனிவெலி, கொட்டகலை, மடுல்சீமை, மல்வத்தவெலி, மஸ்கெலியா, மத்துரட, நமுனுகுல, புசல்லாவ, தலவாக்கலை, உடபுசல்லாவ, வட்டவளை மற்றும் எல்கடுவ ஆகிய பெருந்தோட்டக் கம்பனிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
ஒப்பந்தத்துக்கமைய ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமலாகும் வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவாக அரசாங்கத்தால் மேலதிகமாக 200 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா நாட்சம்பள அடிப்படையில் பெப்ரவரி 10ஆம் திகதி சம்பளம் வழங்கப்படும் என செயலாளர் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்தார்.





