எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை: ஜனாதிபதி அநுரகுமார
எம்மீது நம்பிக்கை கொண்டு இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுங்கள்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு இந்த ஆண்டு உயிர்பெறும். எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்டவர்கள் இனி சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய கடமைகளை முறையாக செய்யுங்கள். சட்டத்தின் ஊடாக நான் பாதுகாப்பு வழங்குவேன் என ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.
நுவரெலியாவில் நடைபெற்ற 'முழு நாடும் -ஒன்றாக' போதைப்பொருளுக்கு எதிரான தேசிய நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் உள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.யுத்தம் காரணமாக பொருளாதார வீழ்ச்சியடைந்ததாக ஆரம்பத்தில் குறிப்பிட்டார்கள். ஆனால் யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளுக்கு பின்னரே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைவதற்கு பாரம்பரியமான கடைப்பிடித்து வந்த பொருளாதார கொள்கைகளும், ஊழல் மோசடிகளும் பிரதான காரணியாக அமைந்தன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதாரம் மீண்டும் வீழச்சியடையும் என்று குறிப்பிட்டார்கள்.பாகிஸ்தான் - இந்தியா மோதல், மத்திய கிழக்கில் அமைதியின்மை மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரியால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் பொருளாதாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட எதிர்மறையான கருத்துக்கள் அனைத்தும் தோல்வியடைந்தன.
அண்மையில் முழு நாட்டுக்கும் தாக்கம் செலுத்திய தித்வா புயல் தாக்கத்தால் மொத்த தேசிய உற்பத்தியின் இழப்பு 4.1 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளதாக உலக வங்கி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரணமளிப்பதற்கு எங்கும் கடன் பெறவில்லை. புதிதாக நாணயம் அச்சிடவில்லை. திறைச்சேரியின் கையிறுப்பு வலுவாக இருந்தது. அதனூடாகவே நிவாரணம் வழங்குகிறோம்.
போதைப்பொருள் பாவனை முழு நாட்டுக்கும் பாரியதொரு பிரச்சினையாக உள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையானால் அந்த குடும்பம் முதலில் பாதிக்கப்படும். பின்னர் அந்த கிராமம் பாதிக்கப்படும்.
கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகம், பாதாளக் குழுக்கள் மற்றும் அரச நிர்வாகம் ஒன்றிணைந்ததாக காணப்பட்டது. இந்த நிலைமை தற்போது இல்லை. போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனைக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை தேசிய மட்டத்தில் முன்னெடுத்துள்ளேன்.
ஆகவே எம்மீது நம்பிக்கை கொண்டு இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். சிறந்த இளைஞர் சமூகத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுங்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டு இந்த ஆண்டு உயிர் பெறும்.
கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் பாதுகாக்கப்பட்டவர்கள் பலர் இனி சட்டத்தால் தண்டிக்கப்படுவார்கள். எவரையும் பாதுகாக் வேண்டிய தேவை எனக்கு கிடையாது. ஆகவே சட்டத்தை முறையாக செயற்படுங்கள்.உங்களுக்கு நான் சட்டத்தால் பாதுகாப்பளிக்கிறேன். பொலிஸாருக்கு இந்த விசேட அறிவுறுத்தலை விடுக்கிறேன்.
அரச உத்தியோகத்தர்களுக்கு 2025,2026 மற்றும் 2027 ஆம் ஆண்டு என மூன்று கட்டமாக சம்பளம் அதிகரிக்கப்படும்.இதற்கு 11 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருளாதார முன்னேற்றத்தின் உச்சபலன் மக்களுக்கு பகிரந்தளிக்கப்படும் என்றார்.





