கடுமையான வெப்பகாலநிலை மே முதல்வாரம் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர்
தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்ப காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் மே மாதம் முதல்வாரம் வரை நீடிக்ககூடும். சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் காலை 11 மணிமுதல் மாலை 04 மணிவரையான காலப்பகுதியில் வெயிலில், திறந்த வெளியில் இருப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (மேலதிக) அஜித் விஜேமான்ன குறிப்பிட்டார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அலுவலகத்தில் 27-03-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புவி வெப்பமடைதல் தீவிரமடைந்துள்ளதால் மனித உடலுக்கு உணரக்கூடிய வகையில் தற்போது மிகவும் வெப்பமான காலநிலை காணப்படுகிறது.தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் ஏப்ரல் மாதம் முதல் வாரம் முதல் மே மாதம் முதல் வாரம் வரை இந்த வெப்பமான காலநிலை தொடரும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் சாத்தியம் காணப்படுகிறது.
தற்போது முதலாவது இடைப்பருவப் பெயர்ச்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த காலப்பகுதியில் குறிப்பிட்ட திசையிலிருந்து காற்று வீசாது. காற்றின் வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும். இக்காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதனால், மேகமூட்டம் குறைவாக இருப்பதாலும் கடல் மற்றும் நிலப்பரப்பு வெப்பமடைந்து வெப்ப அலைகளை வெளியிடுகின்றன. இதன் மூலம் வளிமண்டலம் மேலும் வெப்பமடைகிறது.
தினமும் முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான காலப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் வெளிப்புறச் செயல்பாடுகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் வெப்பத்தை குறைப்பதற்கு அடிக்கடி நீர் அருந்த வேண்டும். அதேபோல் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் வெயிலில் திறந்த வெளியில் இருப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.





