கபில சந்திரசேனவின் மரணம்; அரவிந்தவின் வீட்டில் சிசிடிவி காட்சிகள் பதிவில் இல்லை
இந்த மரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், அரவிந்த டி சில்வாவின் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவில் இல்லை எனவும், சிசிடிவிகள் இயக்க நிலையில் இருந்தபோதிலும் அதன் காட்சிகள் களஞ்சியமாகியிருக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பேதரிஸ் மாவத்தையில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன தொடர்பிலான மரண விசாரணை நடவடிக்கைகள் இரண்டாம் நாளாகவும் கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது இந்த மரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், அரவிந்த டி சில்வாவின் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவில் இல்லை எனவும், சிசிடிவிகள் இயக்க நிலையில் இருந்தபோதிலும் அதன் காட்சிகள் களஞ்சியமாகியிருக்கவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன் நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட தேடுதல் உத்தரவுக்கு அமைவாக கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஹைட் பாக்கில் உள்ள மற்றுமொரு வீட்டினை சோதனையிட்டதாகவும், இதன்போது அங்கிருந்து மடிக்கணினி மற்றும் ஆவணங்கள் சிலவற்றை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதேநேரம் இதற்கு முன்னர் கடந்த தவணையின் போது நீதிமன்றம் கேள்விக்குட்படுத்திய, கபில சந்திரசேன மரணமடைந்த நிலையில் இருந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட மருந்துகள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இதன்போது நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.





