குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தில் 98 இலட்சம் ரூபா மோசடி: உயர் அதிகாரி ஒருவர் கைது
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளை அடுத்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை நிறுவுவதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 98 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில், அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளராக (தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாடு) பணியாற்றும் இந்திக்க ஹேரத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளை அடுத்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்காக 'பயனர் மேலாண்மை தொகுதி' எனும் மென்பொருளைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் 98 இலட்டசம் 31 ஆயிரம் 250 ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிதி செலுத்தப்பட்ட போதிலும், அந்த மென்பொருளை திணைக்களத்தில் நிறுவுவதற்கோ அல்லது அதனைப் பெற்றுக்கொள்வதற்கோ நடவடிக்கை எடுக்காது, அரச பணத்தை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிளைத்துள்ளதாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த நிதி மோசடியுடன் மேலும் நபர்கள் எவரேனும் உள்ளனரா? அல்லது நிறுவனங்கள் ஏதேனும் தொடர்புபட்டுள்ளனவா? என்பது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





