சாட்சிகளை அழிப்பதன் மூலம் விசாரணைகளை முடக்க முடியாது - ரில்வின் சில்வா
தற்போது சில சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவதன் நோக்கம் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே ஆகும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை முடக்கும் நோக்கில் சாட்சியங்களை அழிப்பதற்கோ அல்லது மறைப்பதற்கோ எவரேனும் முற்பட்டால் அது ஒருபோதும் வெற்றியளிக்காதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக மொன்றுக்கு 09-05-2026 அன்று வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மிகத் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த சட்ட நடவடிக்கைகளின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் உள்ளிட்ட பல முக்கிய தரப்பினர் தற்போது விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர்.
இவ்வாறு தாங்கள் சட்டத்தின் பிடியில் சிக்கப்போவதை உணர்ந்துகொண்ட சில தரப்பினர், அதிலிருந்து தப்புவதற்காக சாட்சிகளை அழிக்கும் அல்லது திசைதிருப்பும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம். குறிப்பாக சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு மிக நெருக்கமாகச் செயற்பட்ட 'சண்டி மல்லி' என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் இருந்தபோதே கொல்லப்பட்டார். அதேபோன்று ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் சந்தேகநபர்களை ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் சென்றபோது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றன.
உண்மையில் இவ்வாறான கொலைகள் தனி நபர்களைக் கொல்வதற்காகச் செய்யப்பட்டவை அல்ல. அவர்களுக்குத் தெரிந்த உண்மைகளை - அதாவது அந்தப் பாரிய குற்றங்களுக்குப் பின்னால் இருந்த சூத்திரதாரிகளைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்பட்ட சாட்சி அழிப்புகளே ஆகும். ஆனால் எமது அரசாங்கம் அத்தகைய அநாகரிகமான அரசியல் கலாசாரத்தை முற்றாக நிராகரிக்கின்றது.
தற்போது சில சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவதன் நோக்கம் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே ஆகும். அவ்வாறு சிறைச்சாலையில் வைக்கப்படுபவர்கள், தமக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு போலிப் பிணைகளை முன்வைத்து வெளியே வர முற்படுகின்றனர். ஒரு பிரதான சாட்சி இல்லாது போனாலும் அல்லது கொல்லப்பட்டாலும், அதனால் முழு விசாரணையும் நின்றுவிடும் என எவரும் எண்ண வேண்டாம். ஒரு வழக்கை நிரூபிப்பதற்கு ஒரு சாட்சியம் மட்டும் போதுமானதல்ல, அதற்கான ஆவண ரீதியான மற்றும் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளன.
நாட்டைச் சூறையாடிய திருடர்களைப் பிடிப்பதும், அவர்களுக்குச் சட்ட ரீதியான தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதும் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரதான நோக்கமாகும். அதனைத் தடுப்பதற்கு எத்தகைய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அல்லது அரச அதிகாரிகளை அச்சுறுத்த முற்பட்டாலும் எமது அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.





