ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கு மீண்டும் விண்ணப்பிப்போம்:ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் உறுதி
அண்மைய காலங்களில் நாட்டின் பொருளாதாரம் அடைந்துவரும் முன்னேற்றம் மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் விளக்கமளித்தார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுவருவதை நினைவுகூர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் நன்றியை வெளிப்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அச்சலுகை வழங்கல் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அதனை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி தலைமையிலான அதிகாரிகள் குழுவினருக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு 11-02-2026 அன்று கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது அண்மைய காலங்களில் நாட்டின் பொருளாதாரம் அடைந்துவரும் முன்னேற்றம் மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் விளக்கமளித்தார். பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல், காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அலுவலகம் ஆகிய தேசிய கட்டமைப்புக்களைப் பலப்படுத்தல் என்பவற்றை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
அதேபோன்று இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுவருவதை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத், அச்சலுகை வழங்கல் காலம் நிறைவடையவுள்ள நிலையில், அதனை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டார்.
அதேவேளை 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து நாடு முகங்கொடுத்திருக்கும் சவால்கள் மற்றும் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர், இந்நெருக்கடி நிலையின்போது ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு நன்றியை வெளிப்படுத்தினார்.





