தித்வாவால் பாதிக்கப்பட்ட 90 சதவீதமானோருக்கு முதற்கட்ட நிவாரண நிதி: பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர்
தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட நேரடியான பாதிப்புக்களால் தொலைத்தொடர்பு சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது.
தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட இடரினால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானோருக்கு முதற்கட்ட நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 72 சதவீதமானோருக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது என்று பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்தார்.
தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தித்வா புயல் தாக்கத்தாலும், மழையுடனான காலநிலையாலும் முழு நாடும் பாதிக்கப்பட்டது. கடந்த காலங்களில் ஏதேனும் அனர்த்தத்தால் ஒருசில மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களே பாதிக்கப்படும். ஆனால் இம்முறை இத்தாக்கத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டது.
தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட நேரடியான பாதிப்புக்களால் தொலைத்தொடர்பு சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது. காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னர் தான் தொலைத்தொடர்பு சேவை கட்டம் கட்டமாக வழமைக்குத் திரும்பியது.
தொலைத்தொடர்பு சேவை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கமைய முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்;டது. இந்த கொடுப்பனவு தற்போது அநேகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாதிக்கப்பட்டோர் தமது வீடுகளுக்கு செல்வதற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபா வழங்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
சகல பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும் கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைய 1,63509 பேர் இந்த கொடுப்பனவு பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,இதுவரையில் 1,15757 பேருக்கு 50 ஆயிரம் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பேரிடரால் பாதிக்கப்பட்ட 1,95154 பாடசாலை மாணவர்களில் 1,41 382 பேருக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சகலருக்கு நிவாரணம் வழங்கப்படும். இந்த அனர்த்தத்துக்கு முழு நாடும் முகங்கொடுத்துள்ளதால் தகவல் கோரவில் சற்று தாமதம் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.





