பிரிவினைவாதத்துக்கு ஒருபோதும் இடமில்லை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டவட்டம்
புதிய இலங்கையில் அனைவரும் சட்டத்திற்கு முன்னால் சமமானவர்கள். சட்டத்தின் ஆட்சி முறையாகச் செயல்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
இனவாதம் மற்றும் தீவிரவாதம் என்ற இரு சொற்கள் மிகவும் ஆபத்தானவை. இவை நமது நாட்டின் பலத்தை நமக்கே எதிராகத் திருப்பி நம்மை அழித்துவிடக் கூடியவை. மொழி, மதம் மற்றும் கலாசார வேறுபாடுகளை வேறுபாடுகளை ஒருவருக்கொருவர் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைத்து இன மக்களின் தனித்துவத்தையும் மதித்து நாம் முன்னேற வேண்டும். எனவே இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைவாதத்துக்கு இனி இந்த நாட்டில் இடமில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 04-02-2026அன்று கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 133 ஆண்டுகால காலனித்துவ ஆட்சியின் பிடியிலிருந்து விடுதலையடைய நமது முன்னோர்கள் சிந்திய இரத்தம் மற்றும் கண்ணீரின் பலனாகவே இன்றைய சுதந்திரம் கிடைத்துள்ளது. அவர்கள் எதிர்கால சந்ததியினருக்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தனர். இத்தகைய மாவீரர்களை நாம் என்றும் இதயத்தில் உயரிய இடத்தில் வைத்து கௌரவிக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக நாம் சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், ஒரு நாடு பொருளாதார ரீதியாக எவ்வளவு தூரம் சுதந்திரம் அடைகிறதோ, அப்போதுதான் அந்த நாட்டின் சுதந்திரம் முழுமை பெறுகிறது. எனவே, 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' என்ற கருப்பொருளின் கீழ் நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்.
கடல் வளம், இயற்கை வளங்கள் மற்றும் தட்பவெப்பநிலை எனப் பல சிறப்புகள் இருந்தாலும், இலங்கையின் உண்மையான பலம் அதன் மனித வளமாகும். அறியாமைக்கு பதிலாக அறிவையும், பிளவுகளுக்கு பதிலாக ஒற்றுமையையும் கொண்ட புதியதொரு மனித சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தையும் கல்வியையும் பயன்படுத்தி உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் நமது மக்களைத் தயார்படுத்த வேண்டும்.
நமது அகராதியில் உள்ள மிகவும் மோசமான சொற்கள் இனவாதம் மற்றும் தீவிரவாதம் என்பவையாகும். இவை நமது நாட்டின் பலத்தை நமக்கே எதிராகத் திருப்பி நம்மை அழித்துவிடும். மொழி, மதம் மற்றும் கலாச்சார வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அந்த வேறுபாடுகளை ஒருவருக்கொருவர் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைத்து இன மக்களின் தனித்துவத்தையும் மதித்து நாம் முன்னேற வேண்டும். இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைவாதத்துக்கு இனி இந்த நாட்டில் இடமில்லை.
புதிய இலங்கையில் அனைவரும் சட்டத்திற்கு முன்னால் சமமானவர்கள். சட்டத்தின் ஆட்சி முறையாகச் செயல்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். நேர்மையானவர்கள் சட்டத்திற்கு அஞ்சத் தேவையில்லை; ஆனால் சட்டத்தை மீறுபவர்கள் இனி சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்குவோம்.
2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத் தரவுகள் சில சாதகமான முன்னேற்றங்களைக் காட்டுகின்றன. வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை குறைவு மற்றும் வரி வருமானம் அதிகரிப்பு போன்றவை இதில் அடங்கும். இருப்பினும், இந்த எண்கள் மற்றும் தரவுகள் மட்டும் வெற்றியல்ல. பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் கிராமங்களில் உள்ள சாமானிய மக்களையும் சென்றடைந்து, அவர்களின் வாழ்க்கை தரம் உயரும்போதுதான் அது உண்மையான வெற்றியாகக் கருதப்படும்.
அபிவிருத்தி என்ற பெயரில் இயற்கையை அழிப்பதை ஏற்க முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். அதேபோல், சர்வதேச ரீதியில் கௌரவமான மற்றும் சுதந்திரமான உறவுகளைப் பேணுவதன் மூலம் இலங்கையை உலக அரங்கில் உயர்த்துவதே நமது இலக்காகும். தனியாகச் சென்றால் வேகமாகச் செல்லலாம், ஆனால் வெகுதூரம் பயணிக்க வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும். நாடு எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொண்டு நீண்ட தூரம் பயணித்து வெற்றியை அடைய அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.





