மத்திய கிழக்கு நாடுகளில் தேயிலையின் கேள்வி அதிகரிப்பு - இலங்கை தேயிலை சபை
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் அதனைச் சூழவுள்ள மோதல்கள் காரணமாக குவைத், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது துருக்கி மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்று வழிகள் ஊடாக தேயிலை விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக இலங்கைத் தேயிலைக்கு பாரிய கேள்வி நிலவுவதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கைத் தேயிலை சபையின் தலைவர் ராஜ் ஒபேசேகர கருத்து தெரிவிக்கையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் மக்கள் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க முற்படுவதே இந்த அதிகரிப்புக்கு காரணம் ஆகும். மோதல்கள் ஆரம்பமான முதல் வாரத்தில் தேயிலை ஏலத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்ட போதிலும், தற்போது விலையும் தேயிலைக்கான தேவையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.
கடந்த வார ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை 1,153 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, ஒரு சாதாரண ஏலத்தில் மீதமுள்ள தேயிலையின் அளவு, மொத்த ஏலத்தொகையில் 8 முதல் 10 சதவீதம் வரை இருக்கும். தற்போதும் ஏலங்களில் மீதமுள்ள தேயிலையின் அளவு ஏறக்குறைய அதே அளவில் தான் உள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் அதனைச் சூழவுள்ள மோதல்கள் காரணமாக குவைத், சவுதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது துருக்கி மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்று வழிகள் ஊடாக தேயிலை விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேயிலை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான உரங்களை வழங்க விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.





