வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பெண்கள் மீது பாலின ரீதியில் தாக்கங்கள் - காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் என்ற ரீதியில் பெண்கள் பெரும்பாலும் ஒரு விகிதாசாரமற்ற சுமையை சுமக்கிறார்கள்.
தமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் உறவுகள் அனுபவிக்கும் மனவேதனை மற்றும் அநீதிகளுக்கு மேலதிகமாக, இச்சம்பவங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலின ரீதியில் கூடுதல் தாக்கங்களை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியிருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பெண்கள் சம்மேளனம், அதனைக் கருத்திற்கொண்டு அங்கீகரிக்கப்பட்ட இடைக்கால மற்றும் இறுதி இழப்பீடுகளை தகுதியுள்ள சகல குடும்பங்களுக்கும் எவ்வித தாமதமுமின்றி வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய குடும்ப ஒன்றியத்தின்கீழ் இயங்கிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பெண்கள் சம்மேளனம் விரிவான மகஜரொன்றைத் தயாரித்து அரசாங்கத்திடம் கையளித்திருப்பதுடன், நேற்றும் (27) நேற்று முன்தினமும் (26) அதனைக் கொழும்பில் உள்ள சகல வெளிநாட்டுத் தூதரகங்களிடமும் கையளித்துள்ளன. அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் பெண்கள் சம்மேளனத்தினால் நாடளாவிய ரீதியில் விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் சில முக்கிய விடயங்களை வலியுறுத்த விரும்புகிறோம்.
தமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் உறவுகள் அனுபவிக்கும் மனவேதனை மற்றும் அநீதிகளுக்கு மேலதிகமாக, இச்சம்பவங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலின ரீதியில் கூடுதல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.
தற்போது நிலவும் சட்ட ரீதியான பாகுபாடுகள், பாலின சமத்துவமின்மை, சமூக-கலாசார ரீதியிலான தவறான எண்ணங்கள், வர்க்கப் படிநிலைகள், சமத்துவமற்ற குடும்பப் பொறுப்புகள் போன்றவற்றின் காரணமாகவும், பாலியல் வன்முறை, வாய்மொழி மற்றும் உடலியல் ரீதியான துஷ்பிரயோகம் என்பன உள்ளடங்கலாக அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய வன்முறைகளாலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆண்களை விட வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் என்ற ரீதியில் பெண்கள் பெரும்பாலும் ஒரு விகிதாசாரமற்ற சுமையை சுமக்கிறார்கள். அவர்கள் பொருளாதார நெருக்கடிகள், மன உளைச்சல், சமூகக் களங்கம் மற்றும் தமது பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் என்பவற்றை எதிர்கொள்ளும் அதேவேளை, உண்மை மற்றும் நீதியைக் கோரும் முதன்மைப் போராளிகளாகவும் இயங்குகிறார்கள்.
இவற்றை கருத்திற்கொண்டு அங்கீகரிக்கப்பட்ட இடைக்கால மற்றும் இறுதி இழப்பீடுகளை தகுதியுள்ள சகல குடும்பங்களுக்கும் எவ்வித தாமதமுமின்றி வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
அதேபோன்று அவசியமான வளங்களைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சகல வழக்குகள் குறித்து முறையானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பாலின அடிப்படையிலான மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு விசேட முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, திறன் மேம்பாடு, கண்ணியமானதும் பாதுகாப்பானதுமான வாழ்வாதார வாய்ப்புக்கள் என்பன வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினால், அவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அளித்தலில் விசேட ஒதுக்கீடுகள் வழங்கப்படவேண்டும்.
மேலும் சட்ட அமலாக்க அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல அரச அதிகாரிகளுக்கும் பாலின உணர்திறன் பயிற்சி உடனடியாக வழங்கப்படவேண்டும் என அம்மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





