600 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உடனடியாக குறைப்பு
அரசாங்கத்தின் இந்த விலை குறைப்பு நடவடிக்கைக்கு இணையாக உள்ளூர் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 600 அத்தியாவசியமான பொருட்களின் விலையை குறைத்து அவற்றை சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜெயவர்தன கருத்துத்தெரிவிக்கையில், பண்டிகை காலத்தில் சந்தையில் நிலவும் செயற்கையான விலை ஏற்றத்திலிருந்தும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்தும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் பண்டிகை காலத்தில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த விலை குறைப்பு நடவடிக்கைக்கு இணையாக உள்ளூர் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு தழுவிய ரீதியில் கண்காணிப்பு பணிகளுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.





