‘பெக்கோ சமனின்’ தாய் சுட்டுக்கொலை - துப்பாக்கிதாரி வருகை தந்த மோட்டார் சைக்கிள் மீட்பு
சம்பவத்தில் படுகாயமடைந்த உலஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய அப்பெண், மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பூஸ்ஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கி தாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் வருகைத்தந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
ஊருபொக்க – மாத்தறை வீதியில், தம்பஹல பொல்வத்தை பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் அமைந்துள்ள தேயிலை காணியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே, ஊருபொக்க பொலிஸாரால் இந்த மோட்டார் சைக்கிள் மீட்டுள்ளனர்.
மித்தெனிய, உலஹிட்டியாவ பகுதியில் உள்ள வீடொன்றிற்கு 12-08-2026 அன்று வருகை தந்த இனந்தெரியாத இரு நபர், 9 மில்லிமீட்டர் ரகக் கைத்துப்பாக்கியினால் குறித்த பெண் மீது 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த உலஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய அப்பெண், மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பெக்கோசமன் கெஹெல்பத்தாரா பத்மேவுடன் இணைந்து பாதாள உலகக்குழு உறுப்பினர் என அறியப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகவும் 'கஜ்ஜா' மற்றும் அவரது இரு பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பெக்கோ சமன் மீதே குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைசெய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்குடன் 'கரந்தெனிய சுத்தாவின்' தரப்பினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





