உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல் -மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் நூல் வெளியீடு
நிகழ்வு ஆரம்பமாகி 10 நிமிடத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்வில் இருந்து இடைநடுவே சென்று விட்டார்.
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட 'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' எனும் நூல் வெளியிடப்பட்டது.
நூல் வெளியீட்டு நிகழ்வு 31-03-2026அன்று கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
நூல் வெளியீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார,நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர,திலித் ஜயவீர உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ், டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச,அநுர பிரியதர்ஷன யாப்பா,சாகல ரத்நாயக்க, வஜிர அபேவரத்தன, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
பௌத்த மத அனுஸ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க ஆரம்ப உரையாற்றி ' உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை ஏற்க முடியாது. ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வருவதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடுவதை முற்றாக நிராகரிக்கிறேன். ஏனெனில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ராஜபக்ஷர்கள் அதிகாரத்துக்கு வந்து விட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து உதய கம்மன்பில தான் எழுதிய நூலை பௌத்த மத தலைவர்களுக்கு வழங்கி வைத்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கி வைத்தார். நிகழ்வு ஆரம்பமாகி 10 நிமிடத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்வில் இருந்து இடைநடுவே சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய உதய கம்மன்பில, குண்டுத்தாக்குதல் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்வதற்கு தான் எழுதிய புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பயங்கரவாதி சஹ்ரான் என்றும், தாக்குதல்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் 300 மில்லியன் ரூபா செலவழித்ததாகவும் குறிப்பிட்டார்.





