ஏப்ரல் 20 ஆம் திகதி வரை எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது - சர்வகட்சித் தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதி
எரிபொருள் போதுமானதாக இல்லை எனச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்ட நடைமுறைச்சிக்கல்களை செவிமடுத்ததன் பின்னர், அதனை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என சர்வகட்சித் தலைவர்களிடம் உறுதியளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதன் பின்னர் எரிவாயு கப்பலின் வருகையிலேயே எரிவாயு விநியோகம் தங்கியிருப்பதாகவும், இருப்பினும் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது நிலவிவரும் போர் பதற்றம் மற்றும் அதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்படக்கூடிய நேரடித் தாக்கங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடும் நோக்கிலான சர்வகட்சித் தலைவர்கள் கூட்டம் 20-03-2026 அன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்படி இக்கூட்டத்தில் எரிவாயு விநியோகம் தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது. மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்களால் எரிவாயு விநியோகச் சங்கிலியில் நிலவும் இடையூறுகளை உரியவாறு கையாளும் நோக்கில், நாடளாவிய ரீதியில் நுகர்வோர் கைவசமுள்ள எரிவாயு சிலிண்டர்கள் (லாஃப்ஸ் அல்லது லிட்ரோ) எதுவாக இருந்தாலும், கையிருப்பில் உள்ள எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தி அதனை மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் விநியோகிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் பின்னர் எரிவாயு கப்பலின் வருகையிலேயே எரிவாயு விநியோகம் தங்கியிருப்பதாகவும், இருப்பினும் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எடுத்துரைத்தார்.
அதேபோன்று விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என உத்தரவாதமளித்த ஜனாதிபதி, அடுத்த போகத்துக்கு அவசியமான உரத்துக்கான விலை அதிகரிக்கப்படவேண்டும் எனக் கோரப்பட்டதாகவும், அதற்கமைய ஏற்கனவே கோரப்பட்டதை விடவும் குறைந்த விலைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை எரிபொருள் விநியோகத்தைப் பொறுத்தமட்டில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தாலும், எரிபொருளுக்கான தட்டுப்பாடு ஏற்படாது எனக் கட்சித்தலைவர்கள் மத்தியில் உத்தரவாதமளித்த ஜனாதிபதி, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை எனச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்ட நடைமுறைச்சிக்கல்களை செவிமடுத்ததன் பின்னர், அதனை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும் ஆடையுற்பத்தித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போதைய சூழ்நிலையில் முகங்கொடுத்துவரும் போக்குவரத்து நெருக்கடிகள் குறித்தும், அவர்களுக்கான பஸ் சேவையை உறுதிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்தும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ஆடையுற்பத்தி நிறுவனங்கள் ஊடாக பஸ் சேவைக்கான தேவைப்பாடு குறித்துப் பதிவுசெய்யப்பட்டு, அதற்கேற்றவாறு பஸ் சேவை வழங்கல் உறுதிப்படுத்தப்படும் என்றார்.





