சட்ட ஆட்சிக்கு பெரும் அச்சுறுத்தல்: சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்
இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளைத் தாமதமின்றி அடையாளங்கண்டு, அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் சட்டத்தின் ஆட்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரித்துள்ளது.
அக்குரேகொட பகுதியில் 13-02-2026 அன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டு என வலியுறுத்தியிருக்கும் சங்கம், இத்தகைய முறைகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவது சட்டத்தின் ஆட்சிக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளைத் தாமதமின்றி அடையாளங்கண்டு, அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் எதிர்வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு அவசியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அச்சங்கம் சட்ட அமலாக்கத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.





