டில்வின் சில்வா - கேரளா முதலமைச்சர் இடையே சந்திப்பு
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், 'ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் தூதுக்குழுவினர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தனர்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான அக்கட்சியின் தூதுக்குழு, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை 12-02-2026 அன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இந்தத் தூதுக்குழு இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் விழிஞ்ஞம் துறைமுகம் ஆகியவற்றுக்கும் விஜயம் செய்தது. இதன் மூலம் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நீலப் பொருளாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் நேரடி அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், 'ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் தூதுக்குழுவினர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தனர். சுற்றுலா மற்றும் கலாசாரத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், 'இக்குழுவினர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் விழிஞ்ஞம் துறைமுகத்திற்கும் விஜயம் செய்து, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நீலப் பொருளாதாரத்தில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்து அறிந்துகொண்டனர்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, டில்வின் சில்வா தலைமையிலான தூதுக்குழு காந்திநகரில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தது. அவர்களை குஜராத்திற்கு வரவேற்ற முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாசார உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதில் இந்த சந்திப்பு பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொள்கை ரீதியாக இயங்கும் மாநிலமான குஜராத், பல்வேறு துறைகளுக்கான பிரத்யேகக் கொள்கைகளைக் கொண்டுள்ளது என்றும், இதிலிருந்து இலங்கை நன்மையடைய முடியும் என்றும் டில்வின் சில்வா இதன்போது வலியுறுத்தினார். பொதுவான நலன் சார்ந்த விடயங்களில் குஜராத் மாநில அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பை அவர் வலியுறுத்தினார்.
குஜராத்திலிருந்து அதிகமானோர் இலங்கைக்கு சுற்றுலா செல்வதை ஊக்குவிக்கும் உத்திகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய காலங்களில் இலங்கைக்கும் இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு டில்வின் சில்வா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.





