அரசின் மேலதிக வரிவிதிப்பு தீர்மானத்துக்கு அலி சப்ரி வரவேற்பு
நம்மைப் போன்ற சிறிய மற்றும் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் பொருளாதாரங்கள், போர்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வாகன இறக்குமதிக்கான 50 சதவீத மேலதிகக் கட்டணத்தை விதிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பைப் பாதுகாக்க உதவும் ஒரு விவேகமான நடவடிக்கையாகுமென முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவும் இஸ்ரேலும் கணித்த மற்றும் எதிர்பார்த்ததை விடவும் தற்போதைய போர் நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்று நான் எப்போதும் நினைத்தேன். அதனால்தான், போர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே இவ்வாறானதொரு பொருளாதாரப் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நான் தொடர்ச்சியாகக் கூறி வருகிறேன்.
அதேபோல், 2026 மே 15 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ திறக்கப்பட்ட கடன் கடிதங்களுக்கு விலக்கு அளிப்பதில் வழங்கப்பட்டுள்ள தெளிவு மிகவும் முக்கியமானது. அது ஒரு விவேகமான மற்றும் நியாயமான பாதுகாப்பாகும்.
இது தேவையற்ற நிச்சயமற்ற தன்மையைத் தவிர்ப்பதுடன், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இறக்குமதியாளர்களை மேலும் கஷ்டங்கள் மற்றும் தன்னிச்சையான நிர்வாகச் சிரமங்களில் இருந்து பாதுகாக்கிறது. நெருக்கடியான காலங்களில், கொள்கையைப் போலவே அதைச் செயல்படுத்துவதில் உள்ள தெளிவும் நியாயத்தன்மையும் மிக முக்கியமானவையாகும்.
இலங்கையின் பொருளாதார மீட்சியானது உலகளாவிய ஸ்திரமற்ற தன்மைக்கு, குறிப்பாக வலுசக்தி சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கும் மோதல்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது. நம்மைப் போன்ற சிறிய மற்றும் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் பொருளாதாரங்கள், போர்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது.
இதனால்தான் இலங்கையும் அதுபோன்ற ஒத்த எண்ணம் கொண்ட பிற நாடுகளும், மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் ஆக்கிரமிப்புகளுக்குப் பதிலாக அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திரம் மூலம் தீர்வுகளைக் காண தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். போரின் பொருளாதார மற்றும் மனித ரீதியான சுமையினை பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் உள்ள சாதாரண மக்களே மிகக் கொடூரமாக அனுபவிக்க வேண்டியுள்ளது.





